

தேமுதிக செயற்குழு, பொதுக்குழு, மாநாட்டுக்கு பிறகுதான் சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி குறித்த முடிவு எடுக்கப்படும் என்று அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் பரவி வருவ தாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்தம் தேவைப்படுவதால் தமிழகம் முழுவதும் தேமுதிக சார்பில் ரத்ததான முகாம்கள் நடத்தப்படும் என்றும் விஜயகாந்த் அறிவித்திருந்தார். அதன்படி சென்னையில் போரூர், தரமணி, வில்லிவாக்கம், தண்டை யார்பேட்டை ஆகிய இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ரத்த தான முகாம்களை விஜயகாந்த் நேற்று தொடங்கிவைத்தார்.
தரமணியில் நடந்த நிகழ்ச்சியின்போது நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
கூட்டணி குறித்த முடிவு எதையும் இப்போது நாங்கள் எடுக்கவில்லை. திமுக தலைவர் கருணாநிதி கூட்டணிக்கு அழைத்துள்ளார். மக்கள் நலக் கூட்டணியினரும் பேசியுள்ளனர். மக்கள் நலக் கூட்டணி தலைவர்களுடன் பேசியதை வெளியில் சொல்ல முடியாது. தேமுதிக தங்களின் கூட்டணியில் உள்ளது என்று சிலர் கூறுகின்றனர். அப்படி சொல்பவர்கள் சொல்லிக் கொண்டே இருக்கட்டும்.
தேர்தலுக்கு இன்னும் காலம் உள்ளது. எனவே செயற்குழு, பொதுக்குழு, மாநாடு ஆகியவற் றுக்கு பிறகுதான் கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும். கூட்டணி பற்றி முறைப்படி அறிவிப்பேன். 2016 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக ஆட்சியைப் பிடிக்காது. 37 எம்.பி.க்களை வைத்துள்ள அதிமுக, ஜல்லிக்கட்டு விஷயத்தில் என்ன செய்கிறது என்று தெரியவில்லை.
இவ்வாறு விஜயகாந்த் கூறினார்.
போரூரில் நடந்த ரத்த தான நிகழ்ச்சியில் பங்கேற்ற தேமுதிக மகளிரணி தலைவர் பிரேமலதா விஜயகாந்த் கூறும்போது, ‘‘வெள்ள பாதிப்புகளைத் தொடர்ந்து டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் பரவி வருகின்றன. இன்றைய சூழலில் ரத்த தட்டுப்பாடு உள்ளதாக மருத்துவர்கள் கூறியதன் அடிப்படை யில், இந்த முகாம்கள் நடத்தப் படுகின்றன. கூட்டணிக்காக தேமுதிகவுக்கு அழைப்புவிடுத்த அத்தனை கட்சியினருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். கூட் டணி முடிவை விஜயகாந்த் உரிய நேரத்தில் அறிவிப்பார்’’ என்றார்.