

வளர்பிறை நிறைவடைந்து வரும் 24-ம் தேதி பவுர்ணமி என்பதால் அன்றைய தினம் பதவியேற்கும் வகையில், அமைச்சர்கள் பட்டியலை முதல்வர் இன்று ஆளுநரிடம் தர வாய்ப்புள்ளது.
புதுவையில் முதல்வர் ரங்கசாமிதலைமையில் என்ஆர் காங்கி ரஸ் - பாஜக கூட்டணி அரசு அமைந் துள்ளது. இதுவரை அமைச்சர்கள் யாரும் பதவியேற்கவில்லை. ஆரம்பத்தில் என்ஆர் காங்கிரஸ் - பாஜக இடையில் அமைச்சர்கள் பதவியை பங்கிடுவதில் பிரச்சினைஎழுந்தது. இதனால் அமைச்சர்கள் பதவியேற்பில் காலதாமதமானது. இதில் சமரசம் ஏற்பட்டு என்ஆர் காங்கிரஸூக்கு 3 அமைச்சர்கள், பாஜகவுக்கு 2 அமைச்சர்கள் என முடிவு செய்யப்பட்டது. பாஜக தரப்பில் நமச்சிவாயம், ஜான்குமார் ஆகியோர் அமைச்சர்களாக பரிந்துரை செய்யப்பட்டனர்.
காங்கிரஸிலிருந்து பாஜகவில் இணைந்தபோது ஜான்குமாருக்கு ஏற்கெனவே பாஜக தலைமை அமைச்சர் பதவி தருவதாக உறுதி செய்திருந்தது. இதனால் அவர் பட்டியலில் இடம்பெற்றிருந்தார். என்ஆர் காங்கிரஸில் யார் அமைச்சர்கள் என்பது தெரியாத நிலை இருந்தது.
இந்நிலையில் திடீரென பாஜக அமைச்சர் பட்டியலில் இருந்து ஜான்குமாரை நீக்கி ஊசுடு தனி தொகுதியைச் சேர்ந்த சாய் சரவணக்குமார் அமைச்சர் பதவிக்கு பரிந்துரை செய்யப்பட்டார்.
இதையறிந்த ஜான்குமார் எம்எல்ஏ, தனது மகன் ரிச்சர்ட் எம்எல்ஏ, கல்யாணசுந்தரம் எம்எல்ஏ ஆகியோருடன் டெல்லியில் முகாமிட்டுள்ளார். வாக்குறுதி அளித்தபடி அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து அங்கேயே காத்துள்ளார். ஆனால் அக்கோரிக்கை ஏற்கப்பட வில்லை.
அத்துடன் புதிய அமைச்சர் பட்டி யலை பாஜக தரப்பானது முதல்வர் ரங்கசாமிக்கு தெரிவித்துள்ளது.
இதை பார்த்த பின்பு என்ஆர் காங்கிரஸ் அமைச்சர் பட்டியலையும் முதல்வர் மாற்றி யுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
இதுதொடர்பாக என்ஆர் காங்கிரஸ் தரப்பில் கூறுகையில், “அமைச்சர் பட்டியலை ரங்கசாமி இறுதி செய்துவிட்டால், இன்று (ஜூன் 21) ஆளுநரை சந்தித்து என்ஆர் காங்கிரஸ் - பாஜக அமைச்சர்கள் பட்டியலை வழங்குவார். இதைத்தொடர்ந்து 24-ம் தேதி வியாழக்கிழமை பவுர்ணமி நாளில் அமைச்சர்கள் பதவியேற்க வாய்ப்புள்ளது” என்று குறிப்பிட்டனர்.
தாமதம் தொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் சாமிநாதனிடம் கேட்டதற்கு, “முதல்வர் ரங்கசாமி ஆன்மிக ஈடுபாடு உடையவர். அதனால் வளர்பிறை, நல்லநாள் பார்ப்பார். ஒரு சில காலதாமதம் ஏற்பட்டாலும், விரைவில் முடிவு எடுக்கப்படும். எங்கள் கூட்டணி ஐந்து ஆண்டு ஆட்சி நடத்தும்” என்று குறிப்பிட்டார்.