குப்பை கொட்டும் மையங்கள் இல்லாத சென்னை: மாநகராட்சி திட்டம்

குப்பை கொட்டும் மையங்கள் இல்லாத சென்னை: மாநகராட்சி திட்டம்
Updated on
1 min read

குப்பை கொட்டும் மையங்கள் இல்லாத சென்னையை உருவாக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. நாள்தோறும் சேகரிக்கப்படும் 5,000 டன் குப்பைகளை வீடுகளிலிருந்து நேரடியாக குப்பை கிடங்குக்கு கொண்டு செல்ல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

பெருங்குடி, கொடுங்கையூர் ஆகிய 2 இடங்களில் உள்ள குப்பை கிடங்குகளில்தான் சென்னையின் குப்பைகள் அனைத்தும் கொட்டப்படுகின்றன. வீடுகளிலிருந்து சேகரிக்கப்படும் குப்பைகள் அந்தந்த மண்டலங்களில் உள்ள குப்பை கொட்டும் மையங்களில் சேகரிக்கப்பட்டு, அதன் பிறகுதான் பெருங்குடிக்கோ, கொடுங்கையூருக்கோ கொண்டு செல்லப்படுகின்றன.

இந்த குப்பை கொட்டும் மையங்கள் நகரத்தின் உள் பகுதிகளில் இருக்கின்றன. எனவே, இப்பகுதியில் உள்ளவர்கள், துர்நாற்றம் அடிப்பதாகவும், ஈக்கள் தொல்லை இருப்பதாகவும் புகார் தெரிவித்து வருகின்றனர். எனவே, இவற்றை அகற்ற மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

புதிதாக திட்டமிடப்பட்டிருக்கும் முறையில், மண்டல அளவில் உள்ள குப்பை கொட்டும் மையங்களை அகற்றிவிட்டு, குப்பைகள் வீடுகளிலிருந்து நேரடியாக குப்பை கிடங்குக்கு அனுப்பப்படும்.

சென்னையில் மொத்தம் 12,000 குப்பைத் தொட்டிகள் உள்ளன. குப்பைத் தொட்டிகள் இல்லாத பகுதிகளில் வீடுகளிலிருந்து துப்புரவு தொழிலாளர்கள் மூலம் நேரடியாக குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. இவற்றை குப்பை கொட்டும் மையங்களுக்கும் அங்கிருந்து குப்பைக் கிடங்குகளுக்கும் கொண்டு செல்ல லாரிகள், காம்பேக்டர்கள் உள்ளிட்ட கிட்டத்தட்ட 400 வாகனங்கள் உள்ளன. இவற்றை, காலையிலேயே, வீடுகளிலிருந்து நேரடியாக கொண்டு செல்ல வேண்டுமானால், கிட்டத்தட்ட 800 வாகனங்கள் தேவைப்படும். அதிக எடை கொண்ட குப்பைகளை வெகு தூரம் கொண்டு செல்ல, ஒரே வானத்தை பயன்படுத்தும்போது, அது சீக்கிரம் பழுதடைய வாய்ப்புள்ளது. எனினும், இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த இருப்பதாக, மாநகராட்சி அதிகாரிகள் கூறுகின்றனர்.

இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், “இந்த திட்டத்தால், நகரத்தின் உள்ளே குப்பை தேங்குவதை தடுக்கலாம். தற்போது உள்ள குப்பை கொட்டும் மையங்களை அகற்றுவதால் அப்பகுதியில் உள்ள மக்களுக்கும் துர்நாற்றம், சுகாதார சீர்கேடு உள்ளிட்ட தொல்லைகள் இருக்காது” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in