

குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை நீடிப்பதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக அங்குள்ள வியாபாரிகள் தெரிவித்தனர்.
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன் முதல் செப்டம்பர் வரை தென்மேற்கு பருவமழைக் காலத்தில் சாரல் மழை பெய்யும். இதனால், அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். சுற்றுலாப் பயணிகள் குவிவர்.
கடந்த ஆண்டு கரோனா பரவல் காரணமாக மார்ச் மாதம் இறுதி முதல் டிசம்பர் மாதம் 14-ம் தேதி வரை 9 மாதங்கள் குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை நீடித்தது. டிசம்பர் 15-ம் தேதி முதல் கட்டுப்பாடுகளுடன் அருவிகளில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் குளிர் காலத்தையும் பொருட்படுத்தாமல் குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.
இந்நிலையில், இந்த ஆண்டும் கரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டபோது குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. கரோனா பரவல் தற்போது குறைந்து வருவதால் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு, இயல்பு நிலை திரும்பியுள்ளது. இருப்பினும் குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை நீடிக்கிறது. இதனால் குற்றாலம் பகுதி வியாபாரிகள், விடுதி உரிமையாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
வேதனை அளிக்கிறது
இதுகுறித்து குற்றாலம் பகுதி வியாபாரிகள் கூறும்போது, “குற்றாலத்தில் சாரல் சீஸன் காலத்திலும், சபரிமலைக்கு அய்யப்ப பக்தர்கள் செல்லும் காலத்திலும் மட்டுமே கூட்டம் அதிகமாக இருக்கும். ஆண்டுக்கு சுமார் 5 மாதங்கள் மட்டுமே கூட்டம் இருக்கும். மற்ற காலங்களில் குற்றாலம் களையிழந்து காணப்படும். சுற்றுலா பயணிகள் வருகை இருந்தால் மட்டுமே குற்றாலம் பகுதி வியாபாரிகள், விடுதி உரிமையாளர்களுக்கு வருவாய் கிடைக்கும். இந்த 5 மாதங்களில் கிடைக்கும் வருவாயைக் கொண்டே ஆண்டு முழுவதும் குடும்பத்தை கவனிக்க வேண்டிய நிலை உள்ளது.
குற்றாலத்தில் சுமார் 500 கடைகள் உள்ளன. விடுதிகள் மட்டுமின்றி பல வீடுகளும் சுற்றுலா பயணிகளுக்காக வாடகைக்கு விடப்படுகின்றன. குற்றாலத்தில் உள்ள ஆட்டோ, வேன், கார் ஓட்டுநர்களுக்கும் சுற்றுலா பயணிகள் அதிகமாக வரும் சீஸன் காலத்தில் மட்டுமே வருவாய் கிடைக்கும். கடந்த ஆண்டு 9 மாதம் தடை இருந்ததால் சுற்றுலா பயணிகளை நம்பி வருவாய் ஈட்டும் ஏராளமானோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
இந்த ஆண்டும் குற்றாலத்தில் சாரல் சீஸன் களைகட்டியுள்ள நிலையில் தடை நீடிப்பது வேதனை அளிக்கிறது. மாநிலம் முழுவதும் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில், குற்றாலத்திலும் தளர்வுகள் அளிக்க வேண்டும்” என்றனர்.