Last Updated : 20 Jun, 2021 06:46 PM

 

Published : 20 Jun 2021 06:46 PM
Last Updated : 20 Jun 2021 06:46 PM

புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு கனவு திட்டமாக  ஆக்ஷன் பிளான் தயாரிக்கிறேன்; ஆளுநர் தமிழிசை

தமிழிசை: கோப்புப்படம்

புதுச்சேரி

புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு கனவு திட்டமாக 'ஆக்ஷன் பிளான்' தயாரிக்கிறேன் என, துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

தெலங்கானா ஆளுநர் தமிழிசைக்கு, புதுச்சேரி துணைநிலை ஆளுநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது. அவர், கடந்த பிப்.17-ம் தேதி துணைநிலை ஆளுநராக பொறுப்பேற்றுக் கொண்டார். தற்போது அவர் பதவியேற்று 100 நாட்கள் கடந்து விட்டது.

இந்நிலையில், துணைநிலை ஆளுநரின் 100 நாள் பணி பற்றிய நூல் வெளியிட்டு விழா இன்று (ஜூன் 20) ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. இவ்விழாவில், 100 நாள் பணி குறித்த நூலை துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டு பேசியதாவது:

"புதுச்சேரி மக்கள் நலனுக்காக என்னுடைய பணி இருக்க வேண்டும் என்று பதவியேற்ற நாளில் இருந்து பணியை செய்து வருகிறேன்.

நான் பதவியேற்றபோது கரோனா தடுப்பூசி செலுத்தப்படுவதில் புதுச்சேரி கடைசி மாநிலமாக இருக்கிறது என்று தகவல் வந்தது. அது மாற்றப்பட வேண்டும் என்று உடனே இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரிக்கு சென்று தடுப்பூசி முகாம் எப்படி நடக்கிறது என்று பார்த்தேன். அப்போது, தடுப்பூசி செலுத்தியோர் எண்ணிக்கை 3,500-ல் இருந்தது. தற்போது அது 3.5 லட்சமாக மாறியிருக்கிறது.

வாட் வரியை குறைத்து பெட்ரோல், டீசல் விலையையும் குறைத்தேன். பல அரசு நிறுவனங்களில் தாமதமாக கொடுக்கப்பட்ட ஊதிய பிரச்சினையை உடனே சரி செய்தேன். பாகூர் செல்லும் சாலை சரியில்லை என்று புகார் வந்தவுடன் பேருந்தில் சென்று ஆய்வு செய்தேன். மக்களோடு பழகவில்லை என்றால், அவர்களின் பிரச்சினை எனக்கு தெரிந்திருக்காது.

நான் துணைநிலை ஆளுநர் என்பதைவிட மக்களுக்கு துணை நிற்கின்ற சகோதரி என்ற வகையில் பல பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுத்துள்ளேன். இங்கு 3 மாதங்கள் குடியரசுத் தலைவர் ஆட்சி நடந்து கொண்டிருந்த போது தெலங்கானாவுக்கு மிக குறைந்த நாட்களே சென்றேன். மற்ற அனைத்து நாட்களும் புதுச்சேரியிலிருந்து மக்களுக்கு சேவை செய்தேன்.

அங்கன்வாடியில் ஆய்வு செய்து குழந்தைகளின் ஊட்டச்சத்துக்காக வாரத்துக்கு 3 முட்டை கொடுக்க ஏற்பாடு செய்தேன். கரோனா 2-வது அலை வந்த பிறகு ஒவ்வொரு வியாழக்கிழமையும் சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவக் கல்லூரி முதல்வர்களை அழைத்து கூட்டம் நடத்தி, தேவையான நடவடிக்கைகளை எடுத்தேன்.

இந்தியாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தி கரோனாவை கட்டுப்படுத்திய மாநிலங்களில் புதுச்சேரியும் ஒன்று. அதேபோல், 'உயிர்க்காற்று' என்ற திட்டத்தை ஏற்படுத்தி, ரூ.12 ஆயித்துக்கு ஒரு ஆக்ஸிஜன் படுக்கை என, 2,000-க்கும் மேற்பட்ட ஆக்சிஜன் படுக்கைகளை அதிரித்துள்ளோம்.

அதேபோல், வெண்டிலேட்டர் படுக்கைகளின் எண்ணிக்கையையும் அதிரித்துள்ளோம். 3 மாதங்களுக்கு முன்பு இருந்ததைவிட தற்போது ஆக்சிஜன் படுக்கைகள், வெண்டிலேட்டர் படுக்கைகள் என, அனைத்தும் அபரிமிதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

பள்ளி குழந்தைகளுக்கு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மதிய உணவை உடனே வழங்க நடவடிக்கை எடுத்தேன். கரோனா முன்களப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. ரெம்டெசிவிர், தடுப்பூசி என எதுவும் குறைபாடு இல்லாமல் மத்திய அரசிடமிருந்து பெற்று மக்களுக்கு எந்தவித தடையும் இன்றி கொடுக்கப்பட்டது.

மேலும், மாநில வருமானத்தை பெருக்கவும், பொருளாதாரத்தை உயர்த்தவும் புதுச்சேரியின் கனவு திட்டமாக 'ஆக்‌ஷன் பிளான்' (செயல் திட்டம்) ஒன்றை தயாரித்து வருகிறேன். இது குறித்து, பிரதமர், உள்துறை அமைச்சர் மற்றும் முதல்வரிடம் பேசியுள்ளேன்.

புதுச்சேரிக்கு விமான நிலைய விரிவாக்கம், ஹெலிகாப்டர் வசதி, நீர் ஆம்புலன்ஸ், நீர் விளையாட்டு போன்ற பல திட்டங்கள் கொண்டு வரவும், சுற்றுலாவை அபரிமிதமாக மேம்படுத்தி, பொருளாதாரத்தில் முன்னேறிய மாநிலமாக மாற்றவும் வழி இருக்கிறது.

இந்த மாநிலத்தில் பல துறைகளை கொண்டு வந்து வேலைவாய்ப்பை ஏற்படுத்த முடியும். மூடப்பட்ட மில்களை திறக்கலாமா? அல்லது அந்த இடத்தை பயன்படுத்தி வேலைவாய்ப்பை ஏற்படுத்தலாமா? என்று பெரிய 'ஆக்‌ஷன் பிளான்' வைத்துள்ளேன்.

எனக்கு ஆலோசகர்களாக இருந்த 2 பேரும் மிகச்சிறப்பாக பணியாற்றினார்கள். ஆனால், அவர்கள் அதிகமாக செலவழித்து விட்டதாக தகவல் வந்தது. அதுபோன்ற எதுவும் இல்லை. அவர்களால் புதுச்சேரி பலம் பெற்றது. அவர்கள் மத்திய அரசிடம் பேசி மருந்து, தடுப்பூசி கொண்டுவர பணியாற்றினார்கள்.

புதுச்சேரி மக்களின் நலனுக்காக என்னுடைய பணி தொடரும். இந்த மாநிலம் இன்னும் பலன் பெறும் வகையில் பல திட்டங்களை கொண்டு வருவேன்".

இவ்வாறு ஆளுநர் தமிழிசை பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x