

எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் குழந்தைகள் கரோனா பராமரிப்பு மையத்தை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
இது தொடர்பாக, தமிழக அரசு இன்று (ஜூன் 20) வெளியிட்ட செய்திக்குறிப்பு:
"தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் தலைமையில் பல்வேறு தொடர் நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருவதன் காரணமாக, மாநிலத்தில் கரோனா நோய்த் தொற்றின் தாக்கம் வெகுவாகக் குறைந்து, நோய்த் தொற்று கட்டுப்பாட்டில் உள்ளது.
இந்நிலையில், கோவிட் தொற்றின் மூன்றாவது அலையைச் சமாளிப்பதற்கான ஆயத்தப் பணிகளில் ஒரு பகுதியாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் குழந்தைகளுக்கென 250 படுக்கை வசதிகளுடன் கூடிய பிரத்யேக பூஜ்ஜிய தாமத (Zero delay) குழந்தைகள் கரோனா பராமரிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளதைப் பார்வையிட்டு ஆய்வு செய்து, அங்கு அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சை வசதிகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
இம்மையத்தில் அமைக்கப்பட்டுள்ள அதிதீவிர சிகிச்சைப் பிரிவையும் முதல்வர் பார்வையிட்டார். இப்பிரிவுகளில் குழந்தைகளுக்குத் தேவையான அனைத்து மருத்துவக் கருவிகளும், ஆக்சிஜன் வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன".
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.