

அமைச்சர் பதவி மறுக்கப்பட்டதால் அதை பெற டெல்லியில் ஜான்குமார் எம்எல்ஏ தனது மகனுடன் முகாமிட்டுள்ளார். இந்நிலையில், பாஜக அலுவலகத்தை முற்றுகையிட்ட அவரது ஆதரவாளர்கள் மீது போலீஸார் மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
புதுச்சேரியில் சட்டப்பேரவை தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி வென்று ஆட்சியமைத்தது. முதல்வராக ரங்கசாமியும், சபாநாயகராக பாஜக எம்எல்ஏ செல்வமும் பதவியேற்றனர். தேர்தல் முடிந்து கிட்டத்தட்ட 50 நாட்களாகியும் அமைச்சரவை பொறுப்பு ஏற்கவில்லை.
பாஜகவில் அமைச்சர்களாக நமச்சிவாயம், ஜான்குமார் பெயர்கள் முன்பு தரப்பட்டு இருந்தன. பாஜகவில் இருந்த எம்எல்ஏக்கள் தங்களுக்கு அமைச்சர் பதவி கோரினர். இதையடுத்து, ஜான்குமார் மீதான வழக்குகள் விவரங்களை மேலிடத்துக்கு அனுப்பத் தொடங்கினர்.
குறிப்பாக, ஜான்குமார் ரூ.38 கோடியே 45 லட்சம் அரசுக்கு வரி பாக்கி வைத்துள்ளார். வருமான வரித்துறையில் 2 வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும், இரண்டு வழக்குகள் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரசில் போட்டியிட்ட போது, பிரமாண பத்திரத்தில் உண்மை தகவல்களை தெரிவிக்காததால், புதுச்சேரி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இவ்விவரங்களை முழுமையாக பாஜக தலைமைக்கு பலர் அனுப்பியதால், பாஜகவில் நீண்டகாலமாக இருந்து தற்போது தனித்தொகுதியில் வென்று எம்எல்ஏவான சாய் சரவணகுமாருக்கு அமைச்சர் பதவி தர பாஜக மேலிடம் முடிவு எடுத்துள்ளது.
இதையடுத்து, டெல்லிக்கு தனது மகன் ரிச்சர்ட் எம்எல்ஏ-வுடன் ஜான்குமார் புறப்பட்டார். பிரதமரை சந்திக்க நேற்று (ஜூன் 19) சென்றார். ஆனால், அனுமதி கிடைக்கவில்லை. அதையடுத்து, பிரதமரின் அலுவலக அறிவுறுத்தலின் படி, அகில இந்திய பொதுச்செயலாளர் சந்தோஷ்ஜி-யை சந்தித்துப் பேசினார். அமைச்சர் பதவிக்கு ஓராண்டு காத்திருக்க அவர் தெரிவித்தார். இந்நிலையில், ஜான்குமார் இரண்டாம் நாளாக இன்றும் (ஜூன் 20) பாஜக தலைமையை சந்திக்க டெல்லியில் முயற்சித்து வருகிறார்.
3 பிரிவுகளில் வழக்கு
பாஜகவின் காமராஜர் நகர் தொகுதியின் எம்எல்ஏ-வான ஜான்குமாருக்கு அமைச்சர் பதவி தர வலியுறுத்தி அவரது ஆதரவாளர்கள், புதுச்சேரி பாஜக அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு பேனரை கிழித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நோய் தொற்று உள்ள சூழலில், தடையை மீறி ஒன்று கூடியது உட்பட 3 பிரிவுகளில் ரெட்டியார்பாளையம் போலீஸார் சுமார் 20-க்கும் மேற்பட்டோர் மீது இன்று வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
முற்றுகைக்கும் எனக்கும் சம்பந்தமில்லை - ஜான்குமார்
இது குறித்து, டெல்லியிலுள்ள ஜான்குமாரிடம் கேட்டதற்கு, "முதல்முறையாக 6 எம்எல்ஏக்கள் பாஜகவில் வென்றுள்ளனர். அதில், நானும், எனது மகனும் உள்ளோம். அமைச்சர் பதவி தருவதாக பாஜக தலைமை சொன்னார்கள். தற்போது அமைச்சரவை பட்டியலில் பெயர் இல்லை என்பதால் டெல்லி வந்துள்ளோம். அமைச்சர் பதவி கிடைக்கும் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அதற்காக, டெல்லியில் காத்துள்ளேன். பாஜக அலுவலகத்தில் முற்றுகை நடந்ததற்கும் எனக்கும் சம்பந்தமில்லை. இதற்காக பாஜகவிலிருந்து விலகமாட்டேன்" என்று தெரிவித்தார்.
நாங்கள் காங்கிரஸ் போல் கிடையாது - பாஜக மாநிலத்தலைவர்
இச்சூழல் தொடர்பாக, பாஜக மாநிலத்தலைவர் சாமிநாதனிடம் கேட்டதற்கு, "தேர்வு செய்யப்பட்ட அனைத்து எம்எல்ஏ-க்களும் அமைச்சராக விரும்புவார்கள். ஆனால், யார் அமைச்சர் என்பதை கட்சி மேலிடம்தான் முடிவு செய்யும்.
பாஜக அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டோர், ஜான்குமார் ஆதரவாளர்களா அல்லது வெளியில் இருந்து வந்தவர்களா என்பதை விசாரித்து வருகிறோம். கட்சியினராக இருந்தால் கட்சி நடவடிக்கை எடுக்கும். இச்சம்பவம் ஆரோக்கியமானது அல்ல.
புதுச்சேரி, சிறிய மாநிலம். இது பெரிய பிரச்சினையே இல்லை. நாங்கள் காங்கிரஸ் போல் கிடையாது. உட்கட்சி பிரச்சினை, எல்லா கட்சிகளிலும் நடக்கும். பேசி தீர்ப்போம். உழைப்பவர்களுக்கு அங்கீகாரம் தருவோம். தனிநபரை விட தேசம், புதுச்சேரி மாநிலம் முக்கியம்.
அதே நேரத்தில், ஜான்குமார் உணர்ச்சிவசப்பட்டு பேசுவதை பொருட்படுத்த வேண்டியதில்லை. பாஜக தலைமை உரிய முடிவு எடுக்கும்" என்று தெரிவித்தார்.