Published : 20 Jun 2021 02:03 PM
Last Updated : 20 Jun 2021 02:03 PM

திருமண நிகழ்வுகளில் 50 நபர்கள் மட்டும் கலந்துகொள்ள அனுமதி

பிரதிநிதித்துவப் படம்

சென்னை

திருமண நிகழ்வுகளில் 50 நபர்கள் மட்டும் கலந்துகொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்று (ஜூன் 20) மட்டும் 8,183 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சென்னையில் 468 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் 31,015 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று மட்டும் 180 பேர் கரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், தமிழகத்தில் நாளையுடன் (ஜூன் 21) ஊரடங்கு நிறைவடயவுள்ள நிலையில் ஜூன் 28 வரை ஊரடங்கை நீட்டித்து, முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜூன் 20) உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக, முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிவிப்பில், "மாவட்டங்களில் உள்ள நோய்த் தொற்று பாதிப்பின் அடிப்படையில், மாவட்டங்கள் பின்வருமாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன.

வகை 1 - (11 மாவட்டங்கள்)

கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள்

வகை 2 - (23 மாவட்டங்கள்)

அரியலூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சி, விழுப்புரம், வேலூர் மற்றும் விருதுநகர் மாவட்டங்கள்.

வகை 3 - (4 மாவட்டங்கள்)

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள்

மேற்கண்டவாறு வகைப்படுத்தப்பட்டுள்ள மாவட்டங்களுள், வகை 1-ல் உள்ள 11 மாவட்டங்களுக்கு ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் மட்டும் தொடர்ந்து அனுமதிக்கப்படுகிறது.

மேலும், வகை 2-ல் உள்ள 23 மாவட்டங்களில், ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள சில செயல்பாடுகளுக்கான நேரத் தளர்வுகளும், கூடுதலாக கீழ்க்கண்ட செயல்பாடுகளுக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது.

மேலும், வகை 3-ல் உள்ள 4 மாவட்டங்களில், ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள சில செயல்பாடுகளுக்கான நேரத் தளர்வுகளும், கூடுதலாக சில செயல்பாடுகளுக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது.

பொது

திருமண நிகழ்வுகளுக்கு, வகை 2 மற்றும் 3-ல் குறிப்பிட்டுள்ள மாவட்டங்களுக்கிடையே இ-பாஸ் பெற்று பயணம் செய்ய அனுமதிக்கப்படும். இதற்கான இ-பாஸ் திருமணம் நடைபெற உள்ள மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியரிடமிருந்து இணையவழியாக (https://eregister.tnega.org) விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம். மேலும், திருமண நிகழ்வுகளில் 50 நபர்கள் மட்டும் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவர்.

நீலகிரி மாவட்டம், கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, குற்றாலம் பகுதிகளுக்கு அவசர காரணங்களுக்காக பயணிக்க தொடர்புடைய மாவட்ட ஆட்சியர்களிடமிருந்து இ-பாஸ் பெற்று பயணிக்க அனுமதிக்கப்படும்.

கரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த, தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பொது மக்கள் அவசியமின்றி வீட்டிலிருந்து வெளியில் வருவதையும், கூட்டம் கூடுவதையும் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், கரோனா மேலாண்மைக்கான தேசிய வழிகாட்டு நடைமுறைகளில் குறிப்பிட்டுள்ளபடி, பொது இடங்களில் முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியினை கடைபிடிப்பது, கைகளை அடிக்கடி சோப்பு / கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்வது ஆகியவற்றை கட்டாயம் பின்பற்றவும், நோய்த்தொற்று அறிகுறிகள் தென்பட்டவுடன், பொதுமக்கள் உடனே அருகிலுள்ள மருத்துவமனைகளை நாடி மருத்துவ ஆலோசனை/ சிகிச்சை பெறவும் கேட்டுக்கொள்கிறேன்.

மக்கள் அனைவரும் அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி கரோனா தொற்றினை முற்றிலும் அகற்ற உதவிட வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்".

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x