

தமிழகத்தில் 2,382 பேர் கருப்புபூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் நிமிடத்துக்கு 500 லிட்டர் ஆக்சிஜன்உற்பத்தி செய்யும் மையத்தை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் முன்னிலையில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தொடர்ந்து மருத்துவமனையில் நடைபெறும் கரோனா தடுப்பூசி முகாமை அவர் பார்வையிட்டார்.
தென்சென்னை எம்பி தமிழச்சி தங்கபாண்டியன், திருவிக நகர் எம்எல்ஏ தாயகம் கவி, மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு, மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் துறை இயக்குநர் குருநாதன், சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் தணிகாசலம் ஆகியோர் உடன் இருந்தனர்.
அப்போது, அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கரோனா பரவலைத் தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் பல இடங்களில் திறக்கப்பட்டுள்ளன. திருவல்லிக்கேணி - சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் முயற்சியால் சில தினங்களுக்கு முன்பு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ரூ.1.50 கோடி மதிப்பில்1,000 லிட்டர் ஆக்சிஜன் ஜெனரேட்டர் மையம் அமைக்கப்பட்டது. தற்போது, சைதாப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் ஜெனரேட்டரை பெற்று தந்துள்ளார்.
தமிழக அரசின் தீவிர நடவடிக்கைகளால் 9 ஆயிரத்துக்கும் குறைவாக தொற்று குறைந்துள்ளது. இந்தியாவிலேயே அதிகமான தடுப்பூசி போடப்பட்ட மாநகரமாக சென்னை திகழ்கிறது. இதுவரை தமிழகத்துக்கு 1.22 கோடி தடுப்பூசிகள் வந்துள்ளன. இதில், 1.14 கோடிபேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 5.56 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. இன்று 3 லட்சம் தடுப்பூசிகள் வரவுள்ளன.
தமிழகத்துக்கு அதிகமான தடுப்பூசிகளை வழங்குமாறு பிரதமரிடம்முதல்வர் கோரிக்கை வைத்தார்.அதன்படி, தினமும் தமிழகத்துக்குதடுப்பூசிகள் வந்து கொண்டிருக்கின்றன. கரோனா தொற்று 3-வதுஅலை வந்தாலும், அதை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம். ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 1.79லட்சம் படுக்கைகள் தயாராக உள்ளன. 3-வது அலை குழந்தைகளை தாக்கும் என்ற செய்திகள் வருவதால் குழந்தைகளுக்கான சிகிச்சைவார்டுகள் திறக்கப்பட்டு வருகின் றன.
தமிழகத்தில் இதுவரை 2,382 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 111 பேர்குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நோய்க்கு தேவையான மருந்துகள் கையிருப்பில் உள்ளன. முதல்வரின் காப்பீட்டுத் திட்டத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கு சிகிச்சை அளிப்பது தொடர்பான கோரிக்கை முதல்வரின் கவனத்துக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது. இதுகுறித்து முதல்வர் விரைவில் அறிவிப்பார்.
இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.