Last Updated : 20 Jun, 2021 03:12 AM

 

Published : 20 Jun 2021 03:12 AM
Last Updated : 20 Jun 2021 03:12 AM

கரோனா பரவலுக்கு நடுவில் களப்பணியாற்றும் அங்கன்வாடிப் பணியாளர் முன்களப் பணியாளர்களாக அறிவிக்கப்படுவார்களா?

கரோனா தொற்று வேகமாக பரவிவரும் சூழலிலும் வீடு வீடாகச் சென்று உலர் உணவுப் பொருட்களை வழங்கி வரும் தங்களை முன்களப் பணியாளர்கள் பட்டியலில் இருந்து விடுவித்ததற்கு, அங்கன்வாடிப் பணியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

கரோனா 2-ம் அலை பரவல் காரணமாக தமிழக அரசு முழு ஊரடங்கை அறிவித்துள்ளது. இந்நிலையில் சுகாதாரத் துறை, காவல் துறை, செய்தியாளர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்டோரை முன்களப் பணியாளர்களாக அரசு அறிவித்து அவர்களுக்கு பல்வேறு சலுகைகளை அரசு வழங்கி வருகிறது. நோய்த் தொற்று காரணமாக அவர்கள் உயிரிழக்க நேரிட்டால் அவர்கள் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது.

இத்தருணத்தில், அங்கன்வாடி மையங்களில் பணிபுரியும் சுமார் 92 ஆயிரம் அங்கன்வாடிப் பணியாளர்கள் தொடர்ந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். அங்கன்வாடிக்கு வந்து சென்ற சிறார்களின் வீடுகளை கண்டறிந்து அவர்களுக்கு வீட்டிலேயே உலர்உணவுப் பொருட்களை வழங்கி வருகின்றனர். இதுதவிர சுகாதாரத் துறையினருடன் இணைந்து வீடு வீடாக கரோனா தொற்றாளர்கள் குறித்து கணக்கெடுக்கும் பணியிலும் அவர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

ஆனால், இவர்கள் முன்களப்பணியாளர்களாக அங்கீகரிக்கப்படவில்லை. கரோனா தொற்றுப் பரவலை தடுக்கும் உபகரணங்களும் அவர்களுக்கு வழங்கப்படுவது இல்லை.

“கரோனா தொற்றுப் பரவலாக இருக்கிறது. நாங்கள் செல்லும் இடங்களில் தொற்றாளர்கள் பலர் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதை காண முடிகிறது. எங்களுக்கும் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புஉள்ளது. எனவே அரசு எங்களையும் முன்களப் பணியாளர்களாக அறிவித்து, அதற்கான சலுகைகளை வழங்க வேண்டும்” என அங்கன்வாடிப் பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

“கடந்த ஆட்சியில் அங்கன்வாடிப் பணியாளர்கள் முன்களப் பணியாளர்களாக கருதப்பட்டனர். ஆனாலும், அவர்களுக்கான சலுகைகள் அப்போது வழங்கப்படவில்லை. தற்போது, முன்களப் பணியாளர்கள் என்ற நிலையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். இதற்கான காரணம் தெரியவில்லை. இத்துறையில் அதிக பணியாளர்கள் இருப்பதால் நிதி நெருக்கடி காரணமாக அரசு அவர்களைத் தவிர்த்திருக்கலாம்” என இவர்களை ஒருங்கிணைக்கும், ஒருங்கிணைந்த குழந்தைகள் நலத் திட்ட அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து அங்கன்வாடிப் பணியாளர்கள் நலச் சங்க மாநில பொதுச்செயலாளர் டெய்ஸி கூறும்போது, “ஏறக்குறைய 1 லட்சம் பணியாளர்கள் இருக்கிறோம். கரோனா காலம் மட்டுமின்றி பொதுவாக அரசின் உதவிகளை வீடு வீடாகச் சென்று அளித்து வருகிறோம்.

பணியாளர் நலனைக் கருத்தில் கொண்டு முதல்வர் தற்போது பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். தற்போதுள்ள அசாதாரண நிலையில், எங்களையும் முன்களப் பணியாளர்களாக அறிவித்து அதற்கான சலுகைகளை வழங்க முன்வர வேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x