

சிவகங்கையில் ரூ.10 கோடி மதிப்பிலான கோயில் நிலத்தை அறநிலையத் துறை அதிகாரிகள் மீட்டனர். மேலும், அங்கு கட்டப்பட்டு வந்த வணிக வளாகத்துக்கு சீல் வைத்தனர்.
சிவகங்கையில் அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கவுரிவிநாயகர் கோயிலுக்குச் சொந்தமான 142 ஏக்கர் நிலம் மேலூர் சாலையில் உள்ளது.
இதில் ரூ.10 கோடி மதிப்பிலான 9.58 ஏக்கர் நிலத்தை அதிமுகமுன்னாள் அமைச்சர் ஜி.பாஸ்கரனின் உறவினர்கள் ஆக்கிரமித்துள்ளதாக திமுக நகரச் செயலாளர் துரை ஆனந்த் முதல்வரின் தனிப்பிரிவு, அறநிலையத் துறை அமைச்சருக்கு புகார் மனு அனுப்பி இருந்தார். இதையடுத்து வருவாய்த் துறை, அறநிலையத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் அறநிலையத் துறை உதவி ஆணையர் செல்வி,செயல் அலுவலர் நாகராஜ், வட்டாட்சியர் தர்மலிங்கம், சிவகங்கை நகர் காவல் ஆய்வாளர் சுரேஷ்குமார் ஆகியோர், சம்பந்தப்பட்ட 9.58 ஏக்கர் நிலத்தை நேற்று மீட்டனர். அந்த இடத்தில், ‘இந்த நிலம் கவுரி விநாயகர் கோயிலுக்குச் சொந்தமானது’ என அறிவிப்பு பலகை வைத்தனர். மேலும், அங்கு கட்டப்பட்டு வந்த வணிக வளாகத்துக்கு சீல் வைத்தனர்.
முன்னாள் அமைச்சர் மறுப்பு
இந்த விவகாரம் தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜி.பாஸ்கரன், செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த 5 ஆண்டுகளாக நேர்மையான அமைச்சராக செயல்பட்டுள்ளேன். நான் அமைச்சராக இருந்தபோது, எந்தப் பிரச்சினையிலும் சிக்காமல் இருந்தேன். தற்போது எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கும் சிலர், கோயில் நிலப் பிரச்சினையில் என்னை தொடர்புபடுத்துகின்றனர். அந்த நிலத்தை ஏராளமானோர் ஆக்கிரமித்துள்ளனர். ஆனால், அதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. என் மீது ஆக்கிரமிப்பு புகார் கூறுவதற்கு அரசியல் காழ்ப்புணர்ச்சியே காரணம். என் மீதான குற்றச்சாட்டை சட்டப்படி எதிர்கொள்வேன் என்று கூறினார்.