Published : 20 Jun 2021 03:13 AM
Last Updated : 20 Jun 2021 03:13 AM

கோட்டூர்புரத்தில் சாலையோரம் காத்திருந்த பட்டதாரிகளை சந்தித்த முதல்வர் ஸ்டாலின்: சமூக வலைதளங்களில் வரவேற்பு

சென்னை கோட்டூர்புரத்தில், சாலையோரம் காத்திருந்த பட்டதாரிகளிடம் கோரிக்கை மனுவை பெற்றுக்கொள்ளும் முதல்வர் மு.க. ஸ்டாலின்.படம்: பு.க.பிரவீன்

சென்னை

சாலையோரம் காத்திருந்த பட்டதாரிகளை கவனித்து, தனது வாகனத்தை நிறுத்தி, முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்டதற்கு சமூக வலைதளங்களில் வரவேற்பு கிடைத்துள்ளது.

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று கலந்துகொண்டார். நிகழ்ச்சிமுடிந்தபின் தனது காரில் தலைமைச் செயலகத்துக்கு சென்றுகொண்டு இருந்தார். அப்போது பட்டதாரிகள் சிலர் கோரிக்கை மனுக்களுடன் காந்தி மண்டபம் சாலையில் காத்திருப்பதை பார்த்தார்.

இதையடுத்து தனது வாகனத்தை நிறுத்தச் சொன்ன முதல்வர் ஸ்டாலின், அவர்களிடம் நலம் விசாரித்தார். பின்னர் அவர்களின் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். “இப்படி சாலையில் காத்திருக்க வேண்டாம். கோரிக்கை மனுவை தலைமைச் செயலகத்தில் வந்து தரவேண்டும்’’எனக் கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.

அடுத்த சில நிமிடங்களில் முதல்வரிடம் கோரிக்கை மனு அளித்த பட்டதாரிகளை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சந்தித்தார். அவர்களது கோரிக்கைகளை கேட்டறிந்து, அதன்மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். முதல்வர் ஸ்டாலினின் இந்த செயல்பாட்டுக்கு சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

இதுகுறித்து கோரிக்கை மனு அளித்த பட்டதாரி அருள்செல்வி கூறும்போது, “2018-19-ம் ஆண்டுஆசிரியர் தேர்வு வாரியம் முதுநிலை பட்டதாரி ஆசிரியருக்கான போட்டித் தேர்வை நடத்தியது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பையும் முடித்திருந்தோம். அதில் ஒருபிரிவினர் பணியில் அமர்த்தப்பட்டனர். 2-ம் பட்டியலில் இருந்த சுமார் 1,500 பேர் தற்போது காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர்.

கரோனா பரவல், சட்டப்பேரவை தேர்தல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பணி வழங்கப்படாமல் இருக்கிறது. எனவே, எங்களுக்கு பணிநியமன ஆணை வழங்க கோரிக்கை வைத்துள்ளோம். முதல்வர் எங்களை கவனித்து மனுக்களை பெற்றுக்கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x