ராகுல் காந்தியின் 50-வது பிறந்த நாள்; தமிழக காங்கிரஸ் சார்பில் கொண்டாட்டம், நலத்திட்ட உதவிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து

அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் 50-வது பிறந்த நாளை ஒட்டி சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பயனாளிகளுக்கு நலத்திட்டங்களை வழங்கினார். உடன் கட்சி நிர்வாகிகள்.படம் க.ஸ்ரீபரத்
அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் 50-வது பிறந்த நாளை ஒட்டி சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பயனாளிகளுக்கு நலத்திட்டங்களை வழங்கினார். உடன் கட்சி நிர்வாகிகள்.படம் க.ஸ்ரீபரத்
Updated on
1 min read

அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி. நேற்று தனது 50-வது பிறந்த நாளைக் கொண்டாடினார். அவரது பிறந்த நாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் ராகுல்காந்தியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். மேலும் தனது சமூக ஊடகப் பக்கங்களிலும் ராகுல்காந்திக்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:

எனது ஆருயிர் இளவல் ராகுல்காந்திக்கு பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். காங்கிரஸ் கட்சியின் அடிப்படைப் பண்புகளின் மேல் அவருக்கு உள்ள ஈடுபாடு மற்றவருக்கு எடுத்துக்காட்டாக அமையத்தக்கது ஆகும் என்று தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், “இந்திய அரசியலின் நம்பிக்கையூட்டும் இளவல் ராகுல்காந்திக்கு என் மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.

ராகுல்காந்தி பிறந்தநாள் விழா தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரிதலைமையில் சென்னை சத்தியமூர்த்திபவனில் நடைபெற்றது. இதையொட்டி ஏழை எளிய மக்கள் 100 பேருக்கு உணவு பொருட்கள் மற்றும் நிதியுதவி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில், தமிழக காங்கிரஸ் முன்னாள்தலைவர்கள் கே.வீ.தங்கபாலு, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தமிழக காங்கிரஸ் கட்சியின் மருத்துவர் அணித் தலைவர் கலீல் ரகுமான் ஏற்பாட்டில் 100 பேருக்கு கரோனா உயிர் காக்கும் மருந்து தொகுப்பு வழங்கப்பட்டது. மாநில செயலாளர் கே.எம்.இக்பால்அகமது, மாவட்டத் தலைவர் எம்.பி.ரஞ்சன்குமார் ஆகியோரின் ஏற்பாட்டில் ஆக்சிஜன் செறிவூட்டிகள், டிஜிட்டல் தெர்மாமீட்டர், பல்ஸ் ஆக்சிமீட்டர், முகக்கவசங்கள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் தொகுப்பு, தமிழ்நாடு மருத்துவ இயக்கத்திடம் வழங்குவதற்காக, கே.எஸ்.அழகிரியிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தமிழக காங்கிரஸ் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

சென்னை அடையாறில் தென்சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ், சென்னை புதூர் அசோக் நகரில் தென்சென்னை மத்திய மாவட்ட காங்கிரஸ் சார்பிலும், சென்னையின் பல்வேறு இடங்களிலும் ராகுல்காந்தி பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in