முதலில் உறுதியளித்து விட்டு இப்போது அமைச்சர் பதவி தர மறுப்பதா?- பாஜக எம்எல்ஏ ஜான்குமார் ஆவேசம்

முதலில் உறுதியளித்து விட்டு இப்போது அமைச்சர் பதவி தர மறுப்பதா?- பாஜக எம்எல்ஏ ஜான்குமார் ஆவேசம்
Updated on
1 min read

புதுச்சேரியில் அரசு அமைந்து 45 நாட்களைக் கடந்தும் அமைச் சரவை அமையவில்லை.

இதற்கிடையே கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜகவைச் சேர்ந்த ஜான்குமார் அமைச்சர் பதவிக்கு முயன்று வருகிறார். ‘அவருக்கு பதவி வழங்கப்படாது’ என்ற தகவல்கள் வந்தன.

இந்நிலையில், நேற்று அவரது ஆதரவாளர்கள், புதுவையின் பாஜக தலைமை அலுவலகத்திற்கு சென்று முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கட்சி பேனரை கிழித்து எறிந்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக காமராஜ் நகர் பாஜக எம்எல்ஏ ஜான்குமார் கூறும்போது, "நானும் (காம்ராஜ் நகர்), எனது மகனும் (நெல்லித்தோப்பு) வெற்றி பெற்றிருப்பதால் கண்டிப்பாக ஒரு அமைச்சர் பதவி உறுதி என்று ஒரு மாதத்துக்கு முன்பாகவே கூறியிருந்தனர்.

சிறுபான்மையினத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அமைச்சர் பதவி கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையில் நானும் இருந்தேன்.

4 நாட்களுக்கு முன்பும் அதனை உறுதி செய்தனர். நானும் ஊடகங்களில் விளம் பரம் கொடுத்து விட்டு, கோயில்களில் பூஜைக்கு ஏற்பாடு செய்துவிட்டேன். இது அனைத்து தொகுதிகளிலும் பிரபலமாகிவிட்டது.

ஆனால் கடைசி நேரத்தில், ‘ஊசுடு தொகுதி எம்எல்ஏ சாய் சரவணகுமாருக்கு ஓராண்டு அமைச்சர் பதவி கொடுத்து விட்டு, மீதமுள்ள 4 ஆண்டுகள் அமைச்சர் பதவியில் இருங்கள்’ என்று கூறினார்கள். ‘எனக்கு 6 மாதங்கள் அமைச்சர் பதவி கொடுங்கள். அதன்பிறகு நானே ராஜினாமா கடிதம் கொடுத்து விடுகிறேன்’ என்றேன்.

என்.ஆர்.காங்கிரஸில் இருந்திருந்தால் நிச்சயமாக அமைச்சராகியிருப்பேன். ஆனால், அங்கு இருந்திருந்தால் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியில் நடந்தது போல் தான் நடந்திருக்கும்.

எனக்கு அமைச்சர் பதவி கிடைக்கவில்லை என்ற கோபத்தில் தான் எனது ஆதரவாளர்கள் எங்கள் கட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டார்கள்.

மாநிலத்தின் நன்மைக்காக கட்சிக்கு கட்டுப்பட்டு செயல்பட வேண்டும்’’என்று தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in