

அண்ணா பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகங்களின் பெயர்களில் பட்டப்படிப்பு சான்றிதழ்களையும், 10, பிளஸ்2 சான்றிதழ்களையும் போலியாக தயார் செய்து தமிழகம் முழுவதும் விற்பனை செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை பெரம்பூரில் போலி சான்றிதழ் தயாரித்து விற்கும் கும்பல் செயல்பட்டு கொண்டிருப்பதாக மத்திய குற்றப்பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து சென்னையில் ஏற்கனவே போலி சான்றிதழ்களை தயாரித்து கைதாகி விடுதலையானவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். இதில் போலி சான்றிதழ் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள கருணாகரன் (50) என்பவர், சென்னை வண்ணாரப்பேட்டையில் பதுங்கியிருப்பது காவல் துறையினருக்கு தெரிந்தது.
வண்ணாரப்பேட்டை மேயர் சிவசண்முகம் தெருவில் உள்ள நாகு என்பவரின் வீட்டில் கருணாகரன் வாடகைக்கு குடியிருப்பது விசாரணையில் தெரிந்தது. இதைத் தொடர்ந்து போலீஸார் அந்த இடத்துக்கு சென்றனர். அங்கு கருணாகரன் தங்கியிருந்த அறை பூட்டப்பட்டு இருந்தது. வீட்டின் உரிமையாளரின் அனுமதி பெற்று அறை கதவை போலீஸார் உடைத்து உள்ளே சென்றனர். அறைக்குள் அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரில் போட்டோவுடன் கூடிய இன்ஜினீயரிங் படிப்பு முடித்ததற்கான போலி சான்றிதழ்களும், சென்னை பல்கலைக்கழகத்தின் பட்டப்படிப்பு சான்றிதழ்களும் கட்டு, கட்டாக இருந்தது. மேலும், 500 ரூபாய் கள்ள நோட்டுகளும் ஏராளமாக இருந்தன. அவை அனைத்தையும் காவல் துறையினர் கைப்பற்றினர்.
வீட்டு உரிமையாளர் நாகுவிடம் விசாரித்தபோது, “கருணாகரன் என்னிடம் தனக்கு வெண்ணிலா என்ற மனைவி, குமரேசன், பாண்டியராஜன் என்ற மகன்கள் இருப்பதாகவும் அவர்கள் திருச்சியில் உள்ளதாகவும், வேலை தேடி சென்னைக்கு வந்துள்ளதாகவும் கூறி வீடு கேட்டார். அவருக்கு வீடு கொடுத்தேன். தினமும் இரவில் இரண்டு பேருடன் வருவார். என்ன நடக்கிறது என்று எனக்கு தெரியாது. அதுபற்றி நான் எதுவும் கேட்டதில்லை” என்று கூறியுள்ளார்.
இதையடுத்து, நாகுவிடம் போலீஸார் தங்கள் செல்போன் நம்பரை கொடுத்து, கருணாகரன் வந்தால் உடனடியாக தங்களுக்கு தெரியப்படுத்துமாறு கூறினர். மேலும் போலீஸாரும் ரகசியமாக கண்காணித்தனர்.
இந்நிலையில், வழக்கமாக டீ குடிக்கும் கடைக்கு வெள்ளிக்கிழமை காலையில் கருணாகரன் வந்துள்ளார். இதை கருணாகரன் முதலில் தங்கி இருந்த வீட்டின் உரிமையாளர் கவனித்து போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார். போலீஸார் விரைந்து வந்து கருணாகரனை சுற்றி வளைத்து கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மிகப்பெரிய கும்பல் ஒன்று போலி சான்றிதழ் விற்பனையில் ஈடுபட்டிருப்பது தெரிந்தது.
கருணாகரன் தனது வீட்டிற்கு அருகிலேயே ஒரு கடையை வாடகைக்கு எடுத்து அங்கு அலுவலகம் நடத்தியதும் தெரியவந்தது. அந்த அலுவலகத்தில் சோதனை நடத்திய போலீஸார், போலி முத்திரைத்தாள் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகள் கையெழுத்திட்ட போலி முத்திரை, கம்ப்யூட்டர்கள் ஆகியவற்றை கைப்பற்றினர்.
கருணாகரன் பர்மாவில் இருந்து தமிழகம் வந்துள்ளார். சென்னை பெரம்பூரில் பிரிண்டிங் பிரஸ் நடத்தி போலி ரூபாய் நோட்டுகள் அச்சடித்ததற்காக 2001-ம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறை சென்றிருக்கிறார். இந்நிலையில் விடுதலையாகி மீண்டும் அதே தொழிலை செய்துள்ளார். வெளிநாடு செல்லும் நபர்கள் பலருக்கு இவர் போலி சான்றிதழ்கள் தயார் செய்து கொடுத்துள்ளார். இவருக்கு உடந்தையாக பட்டாளம் பகுதியை சேர்ந்த மூர்த்தி(52), வியாசர்பாடியை சேர்ந்த தேவராஜ்(54) ஆகியோர் இருந்துள்ளனர். இவர்களின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் 300 போலி ரப்பர் ஸ்டாம்புகள், 200 போலி மதிப்பெண் பட்டியல்கள், போலி வழக்கறிஞர் அடையாள அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கருணாகரன், மூர்த்தி, தேவராஜ் ஆகிய மூன்று பேரையும் போலீஸார் கைது செய்தனர். மேலும் இவர்களுடன் தொடர்பில் உள்ள 4 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.