

தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டைக் கற்றுத்தருவதாக சிறுவர், சிறுமியருக்குத் தவறாக வழிகாட்டியது, பெண்களை ஆபாசமாகப் பேசியது உள்ளிட்ட பல்வேறு புகார்களில் கைதான பப்ஜி மதனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸார் 15 நாட்கள் காவலில் சிறையில் அடைத்தனர்.
சேலத்தைச் சேர்ந்த மதன்குமார் என்பவர் தடை செய்யப்பட்ட 'பப்ஜி' போன்ற விளையாட்டுகளின் நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்தி, டாக்சிக் மதன் 18+ என்னும் யூடியூப் சேனலைத் தொடங்கி ஆன்லைன் ஸ்ட்ரீமிங் மூலம் இளைஞர்கள், சிறுவர், சிறுமியருக்குச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார்.
பப்ஜி விளையாட்டைக் கற்றுக்கொடுக்கிறேன் என்கிற போர்வையில் ஒருகட்டத்தில் ஆன்லைன் ஸ்ட்ரீமிங்கில் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்த ஆரம்பித்தார். தவறு எனச் சுட்டிக்காட்டியவர்கள், ஆண்கள், பெண்களை அவதூறாகப் பேசி மிரட்ட ஆரம்பித்தார்.
கண்டபடி ஆபாசமாகப் பேசிய அவரது பேச்சில் ஈர்க்கப்பட்ட சிறுவர், சிறுமியர் என அவரின் யூடியூப் சேனலைப் பின்பற்றுவோர் எண்ணிக்கை அதிகமாகி, 7.8 லட்சம் பார்வையாளர்கள் இணைந்தனர். இதனால் மாதம் ரூ.8 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை பணம் சம்பாதித்தார் மதன்.
அதிக பண வரவு, கேள்வி கேட்போர் யாருமில்லை, பின்பற்றுவோர் லட்சக்கணக்கில் இருந்ததால் அவரது அத்துமீறல் அதிகரித்தது. யூடியூபில் ஆபாசமாகப் பேசுவது, பெண்களை இழிவாகப் பேசுவது, திட்டுவது, சிறுவர், சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறல் செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் மதனுக்கு ஆட்சேபம் தெரிவித்தபோது உங்களால் முடிந்ததைச் செய்துகொள்ளுங்கள் சைபர் கிரைம் போலீஸே என்னை ஒன்றும் செய்ய முடியாது என மிரட்டினார்.
ஒருகட்டத்தில் எல்லை மீறிய மதனின் யூடியூப் சேனல் மீது, சைபர் கிரைம் பிரிவு போலீஸாரிடம் புகார்கள் குவிந்தன. புகார்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து சென்னை மாநகரக் காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவினர் விசாரணைக்காக மதனை நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியிருந்தனர். ஆனால், விசாரணைக்கு ஆஜராகாமல் பப்ஜி மதன் தலைமறைவானார்.
மதனைத் தேடிய போலீஸார் தருமபுரியில் உறவினர் இல்லத்தில் மறைந்திருப்பதை அறிந்து அங்கு சென்று கைது செய்தனர். பின்னர் அவரை சென்னை அழைத்து வந்தனர். பின்னர் அவரை சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பப்ஜி மதனை ஜூலை 3ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க சைதாப்பேட்டை நீதிமன்ற நீதிபதி பரமசிவம் உத்தரவிட்டதை அடுத்து பூந்தமல்லி கிளைச் சிறையில் பப்ஜி மதன் அடைக்கப்பட்டார்.