

பாலியல் தொல்லை வழக்கில் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபாவின் வழக்கில் சம்பந்தப்பட்டு தலைமறைவாக உள்ள பள்ளி ஆசிரியை தீபா வெங்கட்ராமன், முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கத்திற்கு அருகே உள்ள தனியார் சர்வதேச உண்டு உறைவிடப் பள்ளியான சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியில் படித்த மாணவிகளுக்கு, பாலியல் தொல்லை அளித்ததாக, பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா கைது செய்யபட்டுள்ளார்.
மேலும், சிவசங்கர் பாபாவுக்கு ஆதரவாக மாணவிகளை மூளைச்சலவை செய்ததாக அவரது பக்தை சுஷ்மிதாவும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்த வழக்கில் பள்ளி ஆசிரியை தீபா சம்பந்தப்பட்டுள்ளதாக போலீஸார் தேடிய நிலையில் அவர் தலைமறைவானார். பள்ளி ஆசிரியை தீபா வெங்கடராமன் தற்போது முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அதில், ''முன்னாள் மாணவிகள் அளித்த புகாரில் சிபிசிஐடி போலீஸார், தனக்கு எதிராக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளதாக ஊடகங்கள் மூலம் அறிந்து கொண்டேன். சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தில் பதிவான வழக்கில் தேவையில்லாமல் என்னையும் சிபிசிஐடி போலீஸார் சேர்த்துள்ளனர்.
என் மீதான குற்றச்சாட்டில் எந்த உண்மையும் இல்லை. கற்பித்தலில் உள்ள ஈடுபாட்டால், தனியார் (HSBC) வங்கி அதிகாரி வேலையைக் கைவிட்டு ஆசிரியர் பணிக்கு வந்தேன். எனக்கு எதிரான குற்றச்சாட்டுகளில் எந்த உண்மையும் இல்லை என்பதால், முன்ஜாமீன் வழங்க வேண்டும். நீதிமன்றம் விதிக்கும் எந்த நிபந்தனையையும் ஏற்கத் தயாராக இருக்கிறேன்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனு அடுத்த வாரம் விசாரணைக்கு வரவுள்ளது.