Last Updated : 19 Jun, 2021 04:31 PM

 

Published : 19 Jun 2021 04:31 PM
Last Updated : 19 Jun 2021 04:31 PM

மின்தடை குறித்து அமைச்சர் செந்தில்பாலாஜி தவறான தகவலைத் தருகிறார்: தங்கமணி குற்றச்சாட்டு

தங்கமணி: கோப்புப் படம்.

நாமக்கல்

தமிழகத்தில் மின்தடையைச் சரி செய்ய நடவடிக்கை எடுக்காமல் ஏற்கெனவே இருந்த அதிமுக அரசு சரியாகப் பராமரிக்கவில்லை, அதனால் மின்தடை ஏற்படுகிறது என்ற தவறான தகவலை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தருகிறார் என, அத்துறையின் முன்னாள் அமைச்சர், பி.தங்கமணி எம்எல்ஏ தெரிவித்தார்.

இதுகுறித்து, அவர் இன்று (ஜூன் 19) நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சி நடைபெற்றது. இந்தக் காலத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தபடி தமிழகத்தை மின்மிகை மாநிலமாக மாற்றினோம். இது மத்திய அரசின் அறிவிப்பிலும் இடம்பெற்றது. தமிழகம் முழுவதும் ஒரு நிமிடம் கூட மின்தடை ஏற்படாத வகையில் பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டோம்.

பல்வேறு புயல்கள் தமிழகத்தைத் தாக்கியபோதும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு, போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகளை மேற்கொண்டு பொதுமக்களுக்கு விரைவாக மின்விநியோகத்தைச் சீரமைத்துக் கொடுத்தது.

கஜா புயலின்போது 3 லட்சத்து 31 ஆயிரம் மின் கம்பங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான டிரான்ஸ்பார்மர்கள் உடைந்து விழுந்தன. இதனால், 8 மாவட்டங்களில் மின்சார விநியோகம் பாதிக்கப்பட்டது. முதல்வர் மற்றும் அமைச்சர்கள் வேகமாகச் செயல்பட்டு, உடனடியாக அங்கு மின்கம்பங்கள் மாற்றப்பட்டு, மின் விநியோகம் செய்யப்பட்டது வரலாற்றுச் சாதனையாகும்.

தமிழகத்தில் மே மாதம் 2-ம் தேதி வரை மின்சார விநியோகம் சீராக நடைபெற்று வந்தது. அப்போது தமிழகத்தின் உச்சபட்ச மின்சாரத் தேவை 17,121 மெகா வாட்டாக இருந்தது.

மத்திய அரசின் தொகுப்பில் இருந்து 3,300 மெகா வாட் பெறப்பட்டது போக, மீதி மின்சாரத்தைத் தமிழகத்திலேயே உற்பத்தி செய்தோம். தற்போது மீண்டும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால், மின்சாரத் தேவை குறைந்துள்ளது. தற்போது சுமார் 14 ஆயிரத்து 500 மெகா வாட் மட்டுமே மின்தேவை உள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜி: கோப்புப்படம்

மேலும், தற்போது தமிழகத்தில் காற்றாலை மூலம் 3 முதல் 4 ஆயிரம் மெகா வாட் மின்சாரம் கிடைக்கிறது. தமிழகத்தில் தற்போது 31 ஆயிரம் மெகா வாட் தயாரிக்கும் அளவுக்கு மின்திறன் உள்ளது. அதை முழுமையாகப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திமுக அரசு பதவியேற்று பத்து நாட்களில் மின்சார விநியோகத்தைச் சீரமைப்போம் என்று கூறினர். தற்போது பதவியேற்று ஒரு மாதத்திற்கு மேல் ஆகிறது. மின் உற்பத்தி மற்றும் விநியோகத்தில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளாததால், தற்போது தமிழகம் முழுவதும் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது.

தற்போதைய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தனது துறையை முழுமையாக கவனிக்காததால் இந்தத் தடை ஏற்படுகிறது. அவர் தமிழகத்தில் மின்தடையைச் சரி செய்ய நடவடிக்கை எடுக்காமல் ஏற்கெனவே இருந்த அதிமுக அரசு சரியாகப் பராமரிக்கவில்லை, அதனால் மின்தடை ஏற்படுகிறது என்று காரணம் கூறி, தவறான தகவலைத் தருகிறார்.

கடந்த ஆண்டு ஊரடங்கு அமல்படுத்தியபோது மின்சாரக் கட்டணம் கணக்கெடுப்பதில் சிரமம் ஏற்பட்டது. இதனால், இரண்டு மாதங்களுக்கு முன்பு கட்டிய கட்டணத்தைப் பொதுமக்கள் செலுத்தலாம் என்று அறிவித்தோம். தற்போது கடந்த ஆண்டு மே மாதம் எடுத்த கணக்கின்படி மின்சாரக் கட்டணத்தைச் செலுத்தக் கோருகின்றனர்.

மே மாதம் கோடைக் காலம் என்பதால் பலருக்கும் அதிகப்படியான மின்சாரக் கட்டணம் வந்துள்ளது. அந்தத் தொகையை தற்போது செலுத்தச் சொல்வதால், கூடுதலான கட்டணத்தைச் செலுத்த முடியாமல் பலரும் தினசரி மின்வாரிய அலுவலகங்களுக்கு நடந்து கொண்டிருக்கின்றனர்".

இவ்வாறு தங்கமணி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x