Last Updated : 19 Jun, 2021 03:27 PM

 

Published : 19 Jun 2021 03:27 PM
Last Updated : 19 Jun 2021 03:27 PM

உடலின் ஆக்சிஜன் பற்றாக்குறையை செல்போனில் தெரிவிக்கும் புதிய கருவி; விழுப்புரம் பொறியாளர் கண்டுபிடிப்பு

உடலின் ஆக்சிஜன் பற்றாக்குறையை செல்போனில் தெரிவிக்கும் புதிய கருவியை விழுப்புரம் பொறியாளர் கண்டுபிடித்துள்ளார்.

விழுப்புரத்தைச் சேர்ந்தவர் முகமது சாகுல் அமீது. இவர் மின்னியல் தகவல் தொழில்நுட்பக் கல்வி முடித்தவர். தற்போது, கரோனா ஊரடங்கால் வேலையின்றி வீட்டில் இருந்து வருகிறார்.

கரோனா தொற்றால் மூச்சுத்திணறல் பாதிப்பு ஏற்படுவோரின் உயிரைப் பாதுகாக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு, 'ஆக்சிஜன் அலர்ட் சேஃப்டி டிவைஸ்' (Oxygen alert safety device) ஒன்றை, ஸ்மார்ட் வாட்ச் வடிவில் கண்டுபிடித்துள்ளார்.

இதுகுறித்து சாகுல் அமீது கூறியதாவது:

"இது முழுக்க முழுக்க அறிவியல் சாதனங்களைக் கொண்டு தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த சாதனத்தில் சிம் கார்டு பொருத்தப்பட்டுள்ளது. கையில் வாட்ச் கட்டுவதைப்போல, இந்த சாதனத்தை அணிந்துகொள்ள வேண்டும். அப்படி அணிந்து கொள்பவருக்கு, அவருடைய உடலில் ஆக்சிஜன் அளவு குறைவாக இருந்தால் தெரியவரும்.

அதாவது, ஆக்சிஜன் அலர்ட் சேஃப்டி டிவைஸில் பொருத்தப்பட்டுள்ள சிம் கார்டில், யாருடைய எண்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதோ, அந்த எண்களுக்கு முதலில் மெசேஜ் போகும். அடுத்து 'கால்' போகும். அதன்பிறகு அவர்களுடைய செல்போன் 'வைப்ரேட்' ஆகும். இதையடுத்து, சம்பந்தப்பட்ட நபருக்கு உடலில் ஆக்சிஜன் அளவு குறைவாக இருப்பது தெரியவரும்.

உதாரணமாக, வயதான ஒருவர் வீட்டில் தனியாக இருக்கிறார். அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. அப்போது அவரை மருத்துவரிடமோ, மருத்துவமனைக்கோ அழைத்துச் செல்ல முடியாத நிலையில் அவர் உயிரிழக்க நேரிடும்.

இதனைத் தடுக்கும் வகையிலும், வயதானவர்களின் உயிரைப் பாதுகாக்கும் நோக்கத்திலும் இந்த சாதனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, வீட்டில் தனிமையாக இருப்பவர்கள், இதனை வாங்கிக் கையில் அணிந்து கொண்டால், அவர்களுக்கு ஆக்சிஜன் அளவு குறைவாக இருப்பது தெரியவந்தால், உடனடியாக அதில் பதிவு செய்யப்பட்டுள்ள அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் எண்களுக்கு தகவல் போய்ச் சேரும். அப்போது, உடனடியாக அவர்கள் வந்து, இவரைக் காப்பாற்றுவதற்கு ஏதுவாக இருக்கும்.

மேலும், மருத்துவமனையில் கரோனாவால் அதிகம் பேர் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களை மருத்துவர்களால் சரிவர கவனிக்க முடியாத நிலையில், இந்த சாதனத்தை யார் கையில் அணிந்து இருக்கிறார்களோ, அவர்கள் அந்த சாதனத்தில் மருத்துவருடைய எண்ணைப் பதிவு செய்தால், அந்த மருத்துவருக்கு சம்பந்தப்பட்ட நபருக்கு ஆக்சிஜன் அளவு குறைவாக இருப்பதாகத் தகவல் போகும்.

இதையடுத்து, மருத்துவர் உடனடியாக சம்பந்தப்பட்ட வார்டுக்குச் சென்று, அந்த நோயாளிக்கு உரிய சிகிச்சை அளிக்க ஏதுவாக இருக்கும். இந்த சாதனத்தைத் தயாரிக்க ரூ.2,000 செலவானது. அரசு உதவி செய்தால் மேலும் குறைந்த விலையில் இதனைத் தயாரிக்க முடியும்".

இவ்வாறு சாகுல் அமீது தெரிவித்தார்.

கரோனா நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்து வழங்கும் மினி கார் ஒன்றை செல்போன் மூலம் இயக்குவதைக் கண்டுபிடித்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சாகுல் அமீது ஏற்கெனவே பாராட்டு பெற்றவர் என்பது குறிப்பிடதக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x