Published : 19 Jun 2021 11:21 AM
Last Updated : 19 Jun 2021 11:21 AM

மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீர்மானம்: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வேண்டுகோள்

சென்னை

ஏழு மாத காலமாக தலைநகர் புதுடெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவையும், ஊக்கத்தையும் அளிக்கும் வகையில் தமிழக அரசின் சார்பில் முதல்வர் ஸ்டாலின், பிரதமரிடம் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியிருப்பது மிகுந்த அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வரவேற்றுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் பெ.சண்முகம் இன்று விடுத்துள்ள அறிக்கை:

“தமிழக முதல்வர் ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தபோது தமிழக அரசின் சார்பில் கோரிக்கை மனுவை அளித்துப் பேசியுள்ளார். அக்கோரிக்கைகளில், மத்திய அரசு நிறைவேற்றியுள்ள மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளார். அத்துடன் மின்சாரத் திருத்த மசோதா 2020-ஐ திரும்பப் பெற வேண்டுமென்றும் கோரியுள்ளார். தமிழக முதல்வரின் இந்த நடவடிக்கையை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வரவேற்கிறது.

மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தித்தான் ஏறக்குறைய ஏழு மாத காலமாக தலைநகர் புதுடெல்லியில் விவசாயிகள் போராடி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவையும், ஊக்கத்தையும் அளிக்கும் வகையில் தமிழக அரசின் சார்பில் முதல்வர், பிரதமரிடம் மத்திய அரசின் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியிருப்பது மிகுந்த அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சுட்டிக் காட்டுகிறது. ஒட்டுமொத்த தமிழக விவசாயிகளின் சார்பில் முதல்வருக்கு வாழ்த்துகளையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

அதிமுக வேளாண் விரோதச் சட்டங்களுக்கு ஆதரவளித்ததன் மூலம் தமிழகத்திற்கு மிகப்பெரும் அவப்பெயரை ஏற்படுத்தியிருந்தது. அதைப் போக்கும் வகையிலும் தேர்தல் நேரத்தில் விவசாயிகளுக்குக் கொடுத்திருந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையிலும் தமிழக முதல்வரின் நடவடிக்கை அமைந்துள்ளது.

இதற்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் நடைபெறவுள்ள சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே விவசாயிகளுக்கு விரோதமான மூன்று வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி வைத்திட வேண்டுமென்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்”.

இவ்வாறு சண்முகம் தெரிவித்துள்ளார்.


தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x