

டாஸ்மாக் மதுக்கடைகளில் பணி புரியும் பணியாளர்கள் அங்கிருந்து பணம் அல்லது சரக்கை கையாடல் செய்திருந்தால், அதை திருப்பிச் செலுத்தும்வரை, அவர்களின் ஊதியத்தில் 50 சதவீதம் மற்றும் ஊக்கத்தொகை முழுவதையும் நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
டாஸ்மாக் மதுக்கடைகளில் அடிக்கடி கையாடல் நடைபெறு வதாகவும், சரக்கு இருப்பு குறைந்து போவதாகவும் டாஸ்மாக் தலைமை அலுவலகத்துக்குத் தொடர்ந்து புகார்கள் வருகின்றன. இதைத் தொடர்ந்து, அங்கு முறைகேடுகளை தடுத்து நிறுத்துவதற்காக டாஸ்மாக் தலைமை அலுவலகம் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண் டுள்ளது. இதன்படி, கையாடல் உள்ளிட்ட புகார்களுக்கு உள்ளாவோருக்கு, அதை திருப்பிச் செலுத்தும்வரை குறிப்பிட்ட சதவீதம் ஊதியத் தையும் விற்பனை ஊக்கத் தொகையையும் நிறுத்திவைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக டாஸ்மாக் மாவட்ட மேலாளர்களுக்கு, அந்நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் சவுண்டையா அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:-
சில்லறை விற்பனைக் கடைகளில் பணிபுரியும் பணியா ளர்கள் பணம், சரக்கு ஆகியவற்றை கையாடல் செய்திருப்பின், அந்த தொகையையும் அதற்குண்டான அபராதம் மற்றும் வட்டியையும், தனி செலான்-வரைவோலை மூலமாக டாஸ்மாக் வங்கிக்கணக்கில் செலுத்தவேண்டும். அதுவரை அவர்களுக்குரிய 50 சதவீத மாத ஊதியம் மற்றும் 100 சதவீத விற்பனை ஊக்கத்தொகையை வழங்கக்கூடாது.
கடைப்பணியாளர்களால் செலுத்தப்படும் குறைவுத்தொகை (பணம்/சரக்கு) மற்றும் கையாடல் (பணம்/சரக்கு) தொகையினை தினசரி விற்பனைத் தொகை மற்றும் டாஸ்மாக் நிறுவனத்தின் இதர வருமானத் தொகையில் சரிக்கட்டக்கூடாது. இதனை நடைமுறைப்படுத்தாமல் இருக்கும் சம்பந்தப்பட்ட மாவட்ட மேலாளர் களிடமிருந்து, அதற்கான இழப் பீட்டுத் தொகையை வசூல் செய்வதுடன் தக்க ஒழுங்கு நடவடிக்கை மேலாண்மை இயக்குநரால் மேற்கொள்ளப்படும் என அறிவுறுத்தப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.