Published : 19 Jun 2021 03:13 AM
Last Updated : 19 Jun 2021 03:13 AM

‘சேவாபாரதி' நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பங்கேற்றதால் சர்ச்சை: ஆர்.எஸ்.எஸ்.வுடன் இணக்கமாக செல்கிறதா திமுக?

சென்னை

ஆர்.எஸ்.எஸ்.ஸின் தன்னார்வ தொண்டு அமைப்பான சேவாபாரதி நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் ஆகியோர் பங்கேற்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதன்மூலம் ஆர்.எஸ்.எஸ்.ஸுடன் திமுக இணக்கமாக செல்கிறது என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

திமுகவும், பாஜகவும் பொதுவெளியிலும், சமூக ஊடகங்களிலும் கடுமையாக மோதிக் கொண்டாலும், ஆர்.எஸ்.எஸ்.ஸுடன் ஓர்இணக்கமான போக்கை திமுககடைபிடிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன. திமுகதலைவராக இருந்த கருணாநிதியின் மறைவுக்கு ஆர்.எஸ்.எஸ்.அகில இந்திய கூட்டத்தில் இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தின் நகலை தமிழக ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் கடந்த 2018-ல் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வழங்கினர்.

கரோனா தடுப்பு, நிவாரணப் பணிகள் குறித்து தன்னார்வ தொண்டு அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் கடந்த மாதம் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்துக்கு சென்னையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நடத்தும் பாரதி சேவா சங்கம் என்ற அறக்கட்டளைக்கும் சேவாபாரதி அமைப்புக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. 'சேவாபாரதி' என்ற தன்னார்வ தொண்டு அமைப்பை ஆர்.எஸ்.எஸ். நடத்தி வருகிறது. ஆர்.எஸ்.எஸ். நடத்தும் சேவைப் பணிகள் இந்த அமைப்பின் மூலமே நடத்தப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 13-ம் தேதி திருப்பூரில் சேவாபாரதி சார்பில் 200 படுக்கைகள் கொண்டகோவிட் 19 கேர் சென்டர் திறப்புவிழா நடந்தது. இதில் தமிழக செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் கயல்விழிசெல்வராஜ், திருப்பூர் தெற்குதொகுதி எம்எல்ஏ கே.செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் திமுக அமைச்சர்கள் இருவரும் பாரதமாதா படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சமூக ஊடகங்களில் திமுக ஆதரவாளர்களே இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ‘மதவாத அமைப்பான ஆர்.எஸ்.எஸ்.ஸின் சேவாபாரதி நடத்திய நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள் பங்கேற்றது வருத்தம் அளிக்கிறது. இனி இதுபோன்ற நிகழ்வுகளில் பங்கேற்பதை அமைச்சர்கள் தவிர்க்க வேண்டும்’ என்று தமிழக மக்கள் ஒற்றுமை மேடை அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அருணன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக திமுக தரப்பில் கேட்டபோது, ‘‘கரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்த அனைவரது ஒத்துழைப்பையும், உதவிகளையும் திமுக அரசு பயன்படுத்தி வருகிறது. அந்த வகையில் திருப்பூரில் கோவிட் 19 கேர் சென்டர்தொடக்க விழாவில்தான் அமைச்சர்கள் பங்கேற்றனர். திமுகவின் கொள்கை உறுதி அனைவரும் அறிந்த ஒன்று’’ என்றனர்.

அமைச்சர்களை அழைத்து விழா நடத்தியது தொடர்பாக சேவாபாரதி முக்கிய நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘மக்களுக்குஎங்கு உதவி தேவைப்பட்டாலும் உதவிக்கரம் நீட்டுவதற்கேசேவாபாரதி தொடங்கப்பட்டுள்ளது. திருப்பூரில் சேவாபாரதி சார்பில் தொடங்கப்பட்டுள்ள கோவிட் 19 கேர் சென்டர் தொடக்கவிழாவில் அமைச்சர்கள் பங்கேற்றது குறித்து கருத்து தெரிவித்து இந்த சர்ச்சையை மேலும் பெரிதாக்க விரும்பவில்லை’’ என்றனர். ஆனாலும், சேவாபாரதி நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பங்கேற்றது திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x