

வண்டலூர் உயிரியல் பூங்கா நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
வண்டலூர் உயிரியல் பூங்காவில், கடந்த மே 24-ம் தேதி 4 சிங்கங்கள் மற்றும் மே 29-ம் தேதி 7 சிங்கங்கள் என மொத்தம் 11 சிங்கங்களின் மாதிரிகள் கரோனா சோதனைக்காக தேசிய உயர் பாதுகாப்பு விலங்கு நோய்கள் பகுப்பாய்வு நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்நிறுவனம் கடந்த ஜூன் 6-ம் தேதி தெரிவித்த அறிக்கையின்படி, 9 சிங்கங்களின் மாதிரிகளில் கரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
நம் நாட்டில் உள்ள விலங்குகளில் புதிதாக உருவாகும் நோய்க் கிருமிகளை பற்றி ஆராய்ச்சி மேற்கொள்ளும் போபாலில் உள்ள நிஷாத் (NISHAD) நிறுவனம், சிங்கங்களுக்கு தொற்றியுள்ள வைரஸ்களின் மரபணு குறித்த ஆய்வையும் மேற்கொண்டது. அதனைத் தொடர்ந்து 4 சிங்கங்களின் உடலில் இருந்த கரோனா வைரஸ்களின் மரபணு வரிசைப்படுத்துதல் முடிவுகளை நிஷாத் நிறுவனம் பூங்கா நிர்வாகத்திடம் வழங்கியுள்ளது.
அதில் “4 சிங்கங்களின் கரோனா வைரஸ், பாங்கோலின் பரம்பரையை சேர்ந்தது. உலக சுகாதார நிறுவன வகைப்படுத்தல்படி இது டெல்டா (B.1.617.2) வகையை சார்ந்தது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை மாறுபட்ட வகையாக உலக சுகாதார நிறுவனம் வகைப்படுத்தியுள்ளது. இவ்வகை வைரஸ் வேகமாக பரவும் தன்மை கொண்டது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.