Published : 19 Jun 2021 03:13 AM
Last Updated : 19 Jun 2021 03:13 AM

அதிக மின்கட்டணம் வசூலிப்பது தொடர்பான 8 லட்சம் புகார்களுக்கு மின்வாரியம் தீர்வு

சென்னை

அதிக மின்கட்டணம் தொடர்பாக பெறப்பட்ட புகார்களில் இதுவரை 8 லட்சம் புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் கரோனா 2-வது அலை பரவலை தடுப்பதற்காக கடந்த மே 10-ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால், வீடு வீடாக சென்று மின்பயன்பாட்டை கணக்கெடுக்க மின்வாரிய ஊழியர்கள் செல்ல முடியவில்லை.

இதனால் ஊரடங்கு காலத்தில் மின்கட்டணம் செலுத்த வேண்டியவர்கள் கடந்த 2019 மே மாத மின்கட்டணம் அல்லது இந்த ஆண்டு மார்ச் மாத கட்டணத்தை செலுத்தலாம் என மின்வாரியம் அறிவித்தது. எனினும், 2019 மே மாத மின்கட்டணத்தை செலுத்துமாறு சில நுகர்வோருக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டது.

இந்த கட்டணம் அதிகமாக இருப்பதாக நுகர்வோர் புகார் எழுப்பினர். இதையடுத்து, மின்நுகர்வோர் தங்கள் வீட்டு மீட்டரில் பதிவாகியுள்ள மின்பயன்பாடு குறித்து குறுஞ்செய்தி அல்லது வாட்ஸ்அப் மூலம் தகவல் அனுப்பினால், அதன் அடிப்படையில் மின்கட்டணம் கணக்கிடப்பட்டு தெரிவிக்கப்படும் என்று மின்வாரியம் அறிவித்தது.

இந்த வகையில், மின்கட்டணம் அதிகம் இருப்பதாக புகார் அளித்தவர்களில் இதுவரை 8 லட்சம் பேருக்கு, ஏற்கெனவே செலுத்தக் கோரிய மின்கட்டணத்தை ரத்து செய்து, புதிய கட்டணம் தெரிவிக்கப்பட்டு பிரச்சினை தீர்க்கப்பட்டுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x