Published : 19 Jun 2021 03:13 AM
Last Updated : 19 Jun 2021 03:13 AM

மேகேதாட்டு அணை தொடர்பான வழக்கு ஆய்வுக் குழுவை கலைத்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

காவிரி ஆற்றின் குறுக்கே, கர்நாடக அரசு மேகேதாட்டுவில் அணை கட்டுவது தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயம் விசாரித்து வந்தது. அந்த வழக்கில், அத்திட்டம் தொடர்பாக ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவை கலைத்து, தேசிய பசுமை தீர்ப்பாயம் வழக்கை முடித்து வைத்துள்ளது.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு பகுதியில் சுமார் ரூ.9 ஆயிரம் கோடியில் அணை கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டு, அதை செயல்படுத்துவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. இத்திட்டம் மூலம் பெங்களூரு மாநகரின் குடிநீர் பயன்பாட்டுக்கு 4.75 டிஎம்சி நீரை கொண்டு செல்லவும், அந்த அணையில் 400 மெகாவாட் மின் உற்பத்தி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த அணை கட்டப்பட்டால் தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்படும் என தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு விசாரணையில் உள்ளது.

இந்நிலையில், “அணை கட்ட திட்டமிட்டுள்ள பகுதியில் கர்நாடக அரசு கட்டுமான மூலப்பொருட்களை கொண்டு வந்து வைத்துள்ளது. இத்திட்டத்துக்கு சுற்றுச்சூழல் விதிகள் மற்றும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை (2006) விதிகளின்கீழ் உரிய அனுமதி பெறவில்லை. இந்த அணை கட்டப்பட்டால், காவிரி ஆற்றங்கரையோரம் உள்ள காப்புக்காடுகள், வன விலங்கு சரணாலயங்கள் அழிந்துவிடும். அப்பகுதிகளை ஒட்டிய 5,252 ஹெக்டோர் பரப்பளவுள்ள நிலப் பகுதியும் பாதிப்புக்குள்ளாகும்.

அப்பகுதியின் சூழலியல் மற்றும் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படும்” என்று நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது.

இதன் அடிப்படையில், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வு தாமாக முன்வந்து வழக்காக பதிவு செய்தது. இந்த வழக்கை விசாரித்த அமர்வு, உரிய அனுமதியின்றி மேகேதாட்டு அணை திட்டம் செயல்படுத்தப்படுகிறதா என ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வல்லுநர் குழு அமைத்து உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு தொடர்பாக தமிழக அரசு, கர்நாடக அரசு மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் நீர்வள அமைச்சகங்கள் ஆகியவை பதில் அளிக்கவும் உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த வழக்கின் அடுத்த விசாரணை ஜூலை 5-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கர்நாடக அரசு சார்பில், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வின் உத்தரவை திரும்பப் பெறக்கோரும் சீராய்வு மனு தென்மண்டல அமர்வில் தாக்கல் செய்யப்பட்டது. இது உச்ச நீதிமன்றம் தொடர்புடையது என்பதால் இந்த மனு, டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில், அதன் தலைவர் ஏ.கே.கோயல் தலைமையிலான முதன்மை அமர்வில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது.

அப்போது கர்நாடக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “மேகேதாட்டுவில் அணை கட்டுவதற்கு அனுமதி கோரி கர்நாடக அரசு சார்பில் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தில் அளிக்கப்பட்ட மனு நிலுவையில் உள்ளது. அணை விவகாரம் தொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. எனவே, பசுமை தீர்ப்பாயத்தில் இந்த வழக்கை விசாரித்தால் குழப்பம் ஏற்படும். எனவே, இந்த வழக்கை முடித்து வைக்க வேண்டும்” என்றார்.

இதை ஏற்றுக்கொண்ட அமர்வின் தலைவர், ஏற்கனவே மேகேதாட்டு அணை தொடர்பாக ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவை கலைத்து, வழக்கை முடித்து வைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x