

சட்ட விரோதமாக இந்தியாவுக்குள் ஊடுருவி, கோவையில் வசித்து வந்த வங்கதேச நாட்டைச் சேர்ந்த பெண்ணை சரவணம்பட்டி போலீஸார் கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர்.
கோவை இருகூரைச் சேர்ந்தவர் ராம்குமார் (30). இவர், சரவணம்பட்டி காவல்நிலையத்தில் இரு தினங்களுக்கு முன்பு புகார் அளித்தார். அதில்,‘‘சரவணம்பட்டி மகாநகர் அருகே என்னை சிலர் அணுகி, ஒரு பெண்ணை காட்டி பாலியல் உறவுக்கு அழைத்தனர். பணம் எடுத்து வருவதாகக் கூறிதப்பி வந்துவிட்டேன். இதுதொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ எனக் கூறியிருந்தார்.
இதையடுத்து, தொடர்புடைய வீட்டில் போலீஸார் சோதனை நடத்தியபோது, அங்கு 20 வயதுடைய ஒரு பெண் உட்பட 3 பேர் இருந்தனர். அவர்களிடம் விசாரித்தபோது, அவர்கள் பாலக்காட்டைச் சேர்ந்த அஜீத் (32), கர்நாடக மாநிலம் உதய்பூரைச் சேர்ந்த மான்தோய் (25) எனத் தெரியவந்தது. இருவரையும் பாலியல் வழக்கில் போலீஸார் கைது செய்தனர்.
அந்த வீட்டில் இருந்த 20 வயது பெண், கொல்கத்தாவைச் சேர்ந்த அந்தோணிஷா எனத் தெரிவித்தார். ஆனால், அவர் கூறிய முகவரியில் விசாரித்தபோது, அப்படி யாரும்இல்லை எனத் தெரிய வந்தது. தொடர் விசாரணையில், பிடிபட்டவர் தனது உண்மையான பெயரை மறைத்ததும், வங்கதேச நாட்டைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.
இதுதொடர்பாக மாநகர காவல்துறையினர் கூறும்போது, ‘‘அந்தப் பெண் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு, வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக மேற்குவங்க மாநிலம்கொல்கத்தாவுக்குள் ஊடுருவியுள்ளார். அங்கு சில நாட்கள் தங்கிய பின்னர், ரபீக் என்பவர் அந்தப் பெண்ணை பெங்களூருவுக்கு அழைத்து வந்துள்ளார். அங்கு 3 மாதங்கள் வசித்த பிறகு, கோவைக்கு அழைத்துவந்து, ஆசிக் என்பவரிடம் ஒப்படைத்துள்ளார். பின்னர், சரவணம்பட்டி அருகே வாடகைக்கு வீடு எடுத்து அந்தப் பெண் தங்கியுள்ளார். அவரிடம் இருந்து வங்கதேச நாட்டைச் சேர்ந்தவர் என்பதற்கான ஆவணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கடவுச்சீட்டு இன்றி சட்ட விரோதமாக இந்தியாவுக்குள் ஊடுருவியது உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்து, அ்ந்தப் பெண்ணை கைது செய்த போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்தனர். ரபீக், ஆசிக் ஆகியோர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது’’ என்றனர்.
வங்கதேச பெண் கோவையில் கைது செய்யப்பட்டது தொடர்பாக, இந்திய வெளியுறவுத் துறையின் மூலம், வங்கதேச வெளியுறவுத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.