

கோவில்பட்டியில் எழுத்தாளர் கி.ரா.வுக்கு சிலை, அரங்கம் மற்றும் நூலகம் அமைக்க 45 சென்ட் இடம் ஒதுக்கீடு செய்து, ஊராட்சி ஒன்றிய கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அண்மையில் மறைந்த சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் கி.ரா.வுக்கு கோவில்பட்டியில் சிலை அமைக்கப்படும் என, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதையடுத்து கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் கி.ரா.வுக்கு சிலை, அரங்கம் மற்றும் நூலகம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது.
அந்த இடத்தை ஒதுக்கீடு செய்து தீர்மானம் நிறைவேற்றக் கோரி கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்துக்கு மாவட்ட ஆட்சியர் கடிதம் எழுதினார். இது தொடர்பாக கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியக் குழுவின் சிறப்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. ஒன்றியக்குழு தலைவர் கஸ்தூரி சுப்புராஜ் தலைமை வகித்தார். துணைத் தலைவர் பழனிச்சாமி, ஊராட்சி ஒன்றிய ஆணையர் பாலசுப்பிரமணியன், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) சீனிவாசன் முன்னிலை வகித்தனர். ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் எழுத்தாளர் கி.ராஜநாராயணனுக்கு சிலை, அரங்கம் மற்றும் நூலகம் அமைக்க அனுமதி அளித்தும், அதற்காக ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் 0.18.0 ஹெக்டேர் (45 சென்ட்) நிலத்தை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறைக்கு நில மாற்றம் செய்யவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் கி.ரா.வுக்கு சிலை, அரங்கம் மற்றும் நூலகம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது.