Published : 01 Dec 2015 10:39 AM
Last Updated : 01 Dec 2015 10:39 AM

பி.சி, எம்.பி.சி பிரிவினர் கடன் பெற விண்ணப்பிக்கலாம்: சென்னை மாவட்ட ஆட்சியர் தகவல்

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் கடன் பெற டிசம்பர் 5-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என சென்னை மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக, நேற்று அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழக அரசு நிறுவனமான தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் இனத்தைச் சேர்ந்தவர் களின் பொருளாதார நிலையை உயர்த்தும் நோக்கில் மிகக் குறைந்த வட்டி விகிதத்தில் பல்வேறு திட்டங்களின் கீழ் கடனுதவி வழங்கப்படுகிறது.

நகர்ப்புறத்தில் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.ஒரு லட்சத்து 20 ஆயிரத்துக்கு மிகாமலும், 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், 60 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு மட்டும் கடனுதவி வழங்கப்படும்.

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் தனி நபருக்கு 6 சதவீத வட்டியில் ரூ.2 லட்சம், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு 4 சதவீத வட்டியில் ரூ.50 ஆயிரம், ஆடவர் சுய உதவிக் குழுக்களுக்கு 5 சதவீத வட்டியில் ரூ.50 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது.

மேலும், மரபுசார் கலைஞர்கள் மற்றும் கைவினைஞர்களுக்கு சுய தொழிலுக்கும், தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்ப கல்வி பயின்ற இளம் பட்டதாரிகளுக்கான சுய வேலை வாய்ப்பு சிறப்பு கடனாகவும் தனி நபர் ஒருவருக்கு 6- 8 சதவீத வட்டியில் ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது.

கார், வேன், மினிவேன் வாங்க தனிநபருக்கு 10 சதவீதம் வட்டியில் ரூ.3.13 லட்சம் கடன் வழங்கப்படுகிறது. இக்கடன் பெற, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கூட்டுறவு சங்கங்கள் இணைப் பதிவாளர் அலுவலகம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, நகர கூட்டுறவு வங்கிகளில் விண்ணப்பங்களை கட்டணமின்றி பெறலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப் பங்களை சாதி, வருமானம், இருப் பிட சான்றுகள், குடும்ப அட்டை யுடன் முன்னணியில் உள்ள நிறுவனம் ஒன்றில் பெறப்பட்ட விலைப்புள்ளி, திட்ட அறிக்கை ஆகியவற்றுடன் டிசம்பர் 5-ம் தேதிக்குள் சென்னை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவல கத்தில் அளிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x