Published : 18 Jun 2021 10:14 PM
Last Updated : 18 Jun 2021 10:14 PM

தமிழகத்தை விட்டுவிலகும் கரோனா இரண்டாம் அலை: தொற்று பாதிப்பு 15%க்கும் மேல் எந்த மாவட்டத்திலும் இல்லை

தொற்று பாதிப்பு சதவீதம் 15க்கு மேல் எந்த மாவட்டமும் இல்லாததோடு பெரும்பாலான மாவட்டங்களில் தொற்று தீவிரம் குறைந்து வருவதால் தமிழத்தை விட்டு கரோனா இரண்டாவது அலை கடந்து செல்கிறது.

தமிழகத்தில் தற்போது தினசரி தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. மே மாதத்தில் தினசரி 33 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். தற்போது 9 ஆயிரம் பேராக இது குறைந்துள்ளது.

கோவை தொற்று பாதிப்பில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்து ஈரோடு, சேலம், சென்னை, திருப்பூர், செங்கல்பட்டு, நாமக்கல், கடலூர் மாவட்டங்கள் உள்ளன.

தொற்று பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களிலும் முன்பிருந்த எண்ணிக்கையில் இருந்து தற்போது குறைந்து கொண்டுதான் வருகிறது. இந்த தொற்று குறைவுக்கு ஊரடங்கு ஒரளவு கைகொடுத்திருக்கிறது. மேலும், பொதுமக்கள் முகக்கவசம் அணிவது, தனி மனித இடைவெளியை பின்பற்றியது, அடிக்கடி கை கழுவுவது உள்ளிட்டவையும் தொற்று குறைவதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.

தென் மாவட்டங்களில் மதுரை மாவட்டத்தில் ஆரம்பத்தில் தொற்று பரவல் சராசரியாக 1,500 முதல் 1,700 என்றளவில் சென்று கொண்டிருந்தது. ஊரடங்கு கட்டுப்பாடுகளில் சிறப்பாக குறைய ஆரம்பித்து தற்போது தொற்று பரவல் 164 ஆக குறைந்துள்ளது. தினமும் சராசரியாக 900 பேர் வரை குணமடைந்து வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருக்கின்றனர்.

தற்போது மொத்தமாகவே மதுரை மாவட்டத்தில் 2,827 பேர் மட்டுமே சிகிச்சை பெறுகின்றனர். அச்சம் குறைந்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப ஆரம்பித்துள்ளனர். அதனால், தமிழகத்தை விட்டு இராண்டாவது அலை கடந்து செல்லத்தொடங்கியிருக்கிறது.

இதுகுறித்து சிகவங்கை அரசு மருத்துவமனை பொதுநல மருத்துவர் டாக்டர் ஏ.பி.ஃபரூக் அப்துல்லா கூறியதாவது;

கடந்த 10.6.2021 முதல் 16.6.2021 ஆன இந்த வாரத்தில் தமிழகத்தின் சராசரி SAMPLE POSITIVITY RATE 6.8 சதவீதமாக ஆக குறைந்து இருக்கிறது (SAMPLE POSITIVITY RATE என்பது எடுக்கும் ஒவ்வொரு நூறு பரிசோதனைகளில் எத்தனை முடிவுகள் பாசிடிவாக வருகின்றன என்பதைக் காட்டும் புள்ளி விபரமாகும்). இன்னும் ஒரு சில நாட்களில் இந்த SAMPLE POSITIVITY RATE ஐந்துக்குள் சென்று விடும் வாய்ப்பு உள்ளது. தற்போது SAMPLE POSITIVITY RATE 15க்கு மேல் எந்த மாவட்டமும் இல்லை.

நாகப்பட்டினத்தில் 13.04 சதவீதமும், கோவை 12.01, ராணிபேட்டை 11.99 சதவீதமும், நீலகிரி 11.86 சதவீதமும், ஈரோடு 11.46 சதவீதமும் உள்ளன. மதுரை(1.66), காஞ்சி (1.84), சென்னை (1.97), திருவள்ளூர்(2.52), வேலூர் (3.27) ஆகிய ஐந்து மாவட்டங்களில் நோய் தீவிரம் வேகமாக குறைந்துள்ளது. திருப்பத்தூர் (3.50), திருநெல்வேலி (3.57), தென்காசி (3.58), திண்டுக்கல் (3.65), செங்கல்பட்டு (3.81), விருது நகர் (4.85) ஆகிய மாவட்டங்களில் சாம்பிள் பாசிட்டிவ் ஐந்துக்குள் குறைந்துள்ளன. ஜூன் இறுதிக்குள் இரண்டாம் அலை நம்மை முழுவதுமாக விடை பெற்றுச் சென்று விடும் வாய்ப்பு கண்கூடாகத் தெரிகிறது.

ஐரோப்பா நாடுகளில் ஏற்பட்ட மூன்றாவது அலையில் அங்குள்ள மக்கள் அடர்த்தி அடிப்படையில் பார்த்தால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்றாவது அலை வந்தால் மக்கள் அடர்த்தி மிகுந்த இந்தியாவில் பாதிப்பு அதிகம் ஏற்படும் என்று கூறப்படுகிறது.

பெரியவர்களுக்கான படுக்கை வசதிகளை தயார் செய்வது எளிது. ஆனால், குழந்தைகளுக்கான படுக்கை வசதிகள், மருத்துவ வசதிகளை செய்வது நேரம் பிடிக்கும். அதனாலே தற்போதே அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x