தகவல்களை முழுமையாகச் சேகரிப்பதோடு காவல் நிலையங்களின் செயல்பாட்டையும் கண்காணிக்க வேண்டும்: உளவுத் துறைக்குக் காவல் ஆணையர் அறிவுறுத்தல்

தகவல்களை முழுமையாகச் சேகரிப்பதோடு காவல் நிலையங்களின் செயல்பாட்டையும் கண்காணிக்க வேண்டும்: உளவுத் துறைக்குக் காவல் ஆணையர் அறிவுறுத்தல்
Updated on
2 min read

தகவல்களை முழுமையாகச் சேகரிப்பதோடு, காவல் நிலையங்களின் செயல்பாட்டை முறையாகக் கண்காணிக்க வேண்டும் என உளவுத்துறைக் காவலர்களுக்கு காவல் ஆணையர் உள்ளிட்டோர் அறிவுறுத்தியுள்ளனர்.

கோவை மாநகரக் காவல்துறை நிர்வாகம், மாநகரக் காவல் ஆணையர் தலைமையில் இயங்குகிறது. மாநகரக் காவல் துறையில் முக்கியப் பிரிவுகளில் ஒன்றாக நுண்ணறிவுப் பிரிவு (உளவுத்துறை) உள்ளது. உதவி ஆணையர் தலைமையில் இப்பிரிவு செயல்படுகிறது. உதவி ஆணையர், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், சிறப்பு உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் என 42-க்கும் மேற்பட்டோர் இங்கு பணியாற்றி வருகின்றனர்.

மாநகர காவல் ஆணையரின் நேரடிக் கட்டுப்பாட்டில் இப்பிரிவு உள்ளது. உளவுக்காவலர்கள் மாநகரில் உள்ள ஒவ்வொரு சட்டம் - ஒழுங்கு காவல் நிலையத்திலும் உள்ளனர். சில காவல் நிலையத்தில் ஒருவரும், சில காவல் நிலையத்தில் இருவரும், சில காவல் நிலையத்தில் மூன்றுக்கும் மேற்பட்டோரும் என காவல் நிலைய எண்ணிக்கைக்கு ஏற்ப பணியாற்றி வருகின்றனர்.

அதிகாரிகள் மாற்றம்

இவர்கள் தங்களது பகுதிகளில் நடக்கும் ஆர்ப்பாட்டம், போராட்டம் போன்ற சட்டம் - ஒழுங்கு சார்ந்த நிகழ்வுகள், குற்றச் சம்பவங்கள் சார்ந்த நிகழ்களை உடனடியாகச் சேகரித்து, உதவி ஆணையர் மூலம், மாநகரக் காவல் ஆணையரின் கவனத்துக்குக் கொண்டு செல்கின்றனர். கடந்த காலங்களில் உளவுத்துறைக் காவலர்களில் பலர் தங்கள் பணியை உணர்ந்து செயல்பட்டாலும், ஒரு சிலர் ஆதாய நோக்கத்துடன் செயல்பட்டதாகப் புகார்கள் எழுந்தன. இதற்கிடையே தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.

மாநகரக் காவல்துறைக்குப் புதிய காவல் ஆணையராக தீபக் எம்.தாமோர் நியமிக்கப்பட்டார். சட்டம் ஒழுங்கு துணை ஆணையர், உளவுத்துறை உதவி ஆணையர் பணியிடம் மாற்றப்பட்டனர். உளவுப்பிரிவுக்கு அனுபவசாலியும், முன்னரே இங்கு ஆய்வாளராகப் பணியாற்றியவருமான முருகவேல் புதிய உதவி ஆணையராக நியமிக்கப்பட்டார். மேலும், இங்கு பணியாற்றியவர்களில் சரிவரச் செயல்படாதவர்கள், கூடுதல் எண்ணிக்கையில் இருந்தவர்கள் என 9 பேர் சில தினங்களுக்கு முன்னர், வேறு பணியிடத்துக்கு மாற்றி அனுப்பப்பட்டனர்.

ஆணையர் எச்சரிக்கை

இதைத்தொடர்ந்து மாநகர உளவுத்துறையில் உள்ள காவலர்களுடன் மாநகரக் காவல் ஆணையர் தீபக் எம்.தாமோர் தனது அலுவலகத்தில், ஆலோசனை நடத்தினார். இதுதொடர்பாகக் காவல்துறையினர் சிலர் கூறும்போது, ''உளவுத்துறை காவலர்கள் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். ஒருதலைப் பட்சமாக செயல்படாமல், நடுநிலையுடன் செயல்பட வேண்டும். ஒவ்வொரு உளவுத்துறை காவலர்களும் தங்களது தகவலாளியைச் சரிவர ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். எந்த ஒரு தகவலையும் மேலோட்டமாக அளிக்காமல், முறையாக விசாரித்து உரிய விவரங்களுடன் அளிக்க வேண்டும்.

காவல் நிலையங்களில் புகார் அளிக்க வரும் மக்களுக்கு, அங்கு உரிய மரியாதை தரப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க வேண்டும். அந்தப் புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறதா என உளவுக் காவலர்கள் கண்காணிக்க வேண்டும். சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடக் கூடாது. பொதுமக்களிடம் நல்ல பெயர் எடுக்கும் வகையில் செயல்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்களை காவல் ஆணையர், உளவுக்காவலர்களுக்குத் தெரிவித்து எச்சரிக்கை செய்துள்ளார். மேலும், ஒவ்வொரு வாரமும் இதுபோல் கூட்டம் நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்'' என்று தெரிவித்தனர்.

மாநகரக் காவல்துறையின், உளவுத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, ''இங்கு பணியாற்றிய 9 பேர் மாற்றப்பட்டுள்ளனர். தற்போது உள்ள உளவுக்காவலர்கள் தங்களது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். தகவல்களை முழுமையாக சேகரித்து தர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது'' என்று தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in