

வரும் ஜூன் 21-ல் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.
இது தொடர்பாக அரசு தலைமை கொறடா கோவி.செழியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் 21-06-2021 திங்கட்கிழமை மாலை 5 மணியளவில் சென்னை, அண்ணா அறிவாலயம், 'கலைஞர் அரங்கில்' நடைபெறும். அதுபோது திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் கடந்த மே மாதம் 7-ம் தேதி பதவியேற்றுக் கொண்டார். இதைத் தொடர்ந்து தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் கடந்த மே மாதம் 11 மற்றும் 12-ம் தேதி நடைபெற்றது. 11-ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் எம்எல்ஏக்கள் பதவியேற்றுக் கொண்டனர். 12-ம் தேதி சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்தல் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து, வருகிற 21-ம் தேதி காலை 10 மணிக்கு தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெறுகிறது. இதையொட்டி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சபாநாயகர் அப்பாவு இன்று காலை சந்தித்துப் பேசினார்.
இந்நிலையில், அன்றைய தினமே மாலை 5 மணியளவில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் சட்டப்பேரவைக் கூட்டத்தில் எம்எல்ஏக்கள் எவ்வாறு செயல்படவேண்டும். சட்டப்பேரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டிய முக்கியப் பிரச்சினைகள் பற்றி ஆலோசிக்கப்படவுள்ளது. கூடவே, கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் பற்றியும் பேசப்படும் எனத் தெரிகிறது.