Published : 18 Jun 2021 07:50 PM
Last Updated : 18 Jun 2021 07:50 PM
புதுக்கோட்டையில் நாளுக்கு நாள் சடலங்கள் எரியூட்டப்படுவது அதிகரித்து வருவதால் தகன மேடையை மேம்படுத்த வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுக்கோட்டையில் உள்ள மயானங்களில் விறகுகளைக் கொண்டு சடலங்கள் எரியூட்டப்படுவதால் சுற்றுச்சூழல் மாசடைவதைத் தடுப்பதற்காக, போஸ் நகரில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு நகராட்சி நிர்வாகத்தின் மூலம் எரிவாயு தகன மேடை அமைக்கப்பட்டது.
இந்த தகன மேடையில் விறகுகளை எரித்து, அதில் இருந்து காஸ் உற்பத்தி செய்து சடலங்கள் எரியூட்டப்பட்டு வருகின்றன. இது புதுக்கோட்டை ரோட்டரி தொண்டு அறக்கட்டளை எனும் அமைப்பினால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. கரோனா தொற்றுக்கு முன்பு வரை தினசரி குறைந்த எண்ணிக்கையிலான சடலங்கள் எரியூட்டப்பட்டு வந்தன. தற்போது அதிகமான சடலங்கள் எரியூட்டப்பட்டு வருவதால் இதை மேம்படுத்தித் தரவேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் துரை.நாராயணன் கூறும்போது, ''கடந்த மாதத்தில் இருந்து வரிசையில் வைத்துத்தான் இங்கு சடலங்கள் எரியூட்டப்பட்டு வருகின்றன. சில நேரங்களில் விரக்தியில் சிலர், சடலங்களை அருகே உள்ள மயானத்தில் விறகு வைத்து எரியூட்டுகின்றனர். மேலும், தகன மேடையில் புகை அதிகமாக வெளியேறுவதோடு, அடிக்கடி உபகரணங்களும் பழுதடைகின்றன. இவற்றைச் சரிசெய்ய வேண்டும்'' என்று தெரிவித்தார்.
தகன மேடையை நிர்வகித்து வரும் அறக்கட்டளையின் தலைவர் மருத்துவர் எஸ்.ராமதாஸ் கூறியதாவது:
''தகன மேடையானது தினமும் காலை 9 மணியில் இருந்து மாலை 5 மணி வரை இயங்கும். இங்கு, பாதுகாவலர் உட்பட 8 பேர் பணிபுரிகின்றனர். கரோனா தொற்றுக்கு முன்பு வரை நாளொன்றுக்கு அதிகபட்சம் 6 சடலங்கள் எரியூட்டப்படும். சடலத்துக்கு ரூ.2,700 வீதம் வசூலிக்கப்படுகிறது. இயலாதோருக்குக் கட்டணச் சலுகை அளிக்கப்படுகிறது
கரோனா 2-வது அலையில் உயிரிழப்பு அதிகரித்ததால் அத்தகைய தொற்றாளர்களின் சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்காமல் இங்கேயே எரியூட்டப்படுகின்றன. இதுதவிர, மற்ற சடலங்களும் எரியூட்டப்படுவதால் நாளொன்றுக்கு அதிகபட்சமாக 18 சடலங்கள் எரியூட்டப்பட்டு வருகின்றன. மேலும், சாதாரண சடலங்களைப் போன்று அல்லாமல் கரோனா தொற்றாளர்களின் சடலங்கள் பிளாஸ்டிக் கவர்களால் சுற்றப்பட்டு வருவதால் அதை எரியூட்டுவதற்குக் கூடுதல் சிரமம் ஏற்படுகிறது. தினந்தோறும் ஓய்வின்றி அர்ப்பணிப்போடு பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இவ்வாறு செயல்பட்டு வருவதால் எரியூட்டிகள் அடிக்கடி பழுதடைந்துவிடுகின்றன. இத்தகைய சிரமத்தைப் போக்குவதற்காக விறகுகளைப் பயன்படுத்தாமல் நேரடியாக காஸ் மூலம் எரியூட்டும் வகையில் தகன மேடையை மேம்படுத்துமாறு அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளோம்.
இது தொடர்பாக, ரூ.19 லட்சத்து 40 ஆயிரம் நிதி ஒதுக்கிப் பணிகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர்கள் எஸ்.ரகுபதி, சிவ.வீ.மெய்யநாதனிடம் அண்மையில் கோரிக்கை மனு அளித்துள்ளோம். நிர்வாகப் பணிகளை அறக்கட்டளையின் செயலாளர் ஏ.எல்.சொக்கலிங்கம், பொருளாளர் ஆர்.எம்.லட்சுமணன் உள்ளிட்டோர் ஒருங்கிணைத்து வருகின்றனர்''.
இவ்வாறு எஸ்.ராமதாஸ் தெரிவித்தார்.
இந்நிலையில் இதுகுறித்து நகராட்சிப் பொறியாளர் ஜெ.சுப்பிரமணியன் கூறும்போது, ''புகை அதிகமாக வெளியேறுவது சரிசெய்யப்பட்டுவிட்டது. நேரடியாக காஸ் மூலம் எரியூட்டி இயங்கச் செய்வதற்காக முதல் கட்டமாக சுமார் ரூ.6.5 லட்சத்தில் மேம்படுத்த ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது. விரைவில் தகன மேடை மாற்றி அமைக்கப்படும்'' என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT