Published : 18 Jun 2021 07:58 PM
Last Updated : 18 Jun 2021 07:58 PM

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் விரைவில் கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு: இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தகவல்

மதுரை

‘‘மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை விரைவில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்படும்’’ என்று இன்று மீனாட்சியம்மன் கோயிலில் ஆய்வு மேற்கொண்ட இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

மதுரை மீனாட்சியம்மன் கோயில் யானை பார்வதிக்கு கண் பார்வை பாதிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அதற்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவக்குழுவினரிடம் இன்று இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கேட்டறிந்தார்.

அவருடன் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, நிதியமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன், ஆட்சியர் அனீஷ்சேகர் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

அதன்பின் அமைச்சர் சேகர்பாபு செய்திாளர்களிடம் கூறியதாவது:

மீனாட்சியம்மன் கோயிலுக்குச் சொந்தமான பார்வதி யானைக்கு சிறப்பான சிகிச்சை வழங்கப்படுகிறது. யானை நிச்சயமாக விரைவில் குணமடையும். தேவைப்பட்டால் வெளிநாட்டு மருத்துவர்களின் ஆலோசனைப்படி யானைக்கு சிகிச்சையளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மீனாட்சியம்மன் கோயிலில் தீ விபத்தில் சேதமடைந்த வசந்தராயர் மண்டபத்தை சீரமைக்கும் பணிகள் அதிமுக ஆட்சியில் நடைபெறாத நிலையில் தற்போது பணியை தீவிரப்படுத்தி சீரமைக்கவுள்ளோம்.

பக்தர்களின் கோரிக்கைகளை ஏற்று மீனாட்சியம்மன் கோயிலில் உள்ளப் பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு விரைவில் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.

மலைமேல் உள்ள அனைத்துக் கோயில்களுக்கும் பக்தர்கள் செல்வதற்காக விரைவில் ரோப்கார் திட்டத்தை முழுமையாக செயல்படுத்துவோம். கோயில்களில் சித்த மருத்துவமனைகளை உருவாக்கும் திட்டத்தை சீரமைக்கவுள்ளோம்.

கோயில் நிலங்களை அபகரித்தவர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அது திமுகவினராக இருந்தாலும் பாரபட்சமின்றி குற்றவியல் நடவடிக்கை நிச்சயம் எடுக்கப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.

இதேபோல் கோயில்களுக்கு சொந்தமான ஆபரணங்கள் குறித்து இணையத்தில் பதிவிடும் நடவடிக்கையில் பாதுகாப்பு நலன் கருதி தவிர்க்கப்பட்டுள்ளது.

கோயிலுக்கு சொந்தமான ஆபரணங்களை பாதுகாக்க கோயில்களில் பாதுகாப்பு அறைகள் உருவாக்கப்பட்டு வருகிறது.

கரோனா கட்டுப்படுத்தப்பட்டவுடன் முதல்வரின் உத்தரவுபடி விரைவில் கோயில்களில் பக்தர்களுக்கு அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x