Published : 18 Jun 2021 05:37 PM
Last Updated : 18 Jun 2021 05:37 PM

வனவிலங்குகளைக் காக்க ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் பணிக்குழு

சென்னை

கரோனா தொற்றால் 2 சிங்கங்கள் உயிரிழந்த நிலையில் மாநிலம் முழுவதும் வன விலங்குகளைப் பாதுகாக்க வனத்துறை முதன்மைச் செயலர் தலைமையில் 6 பேர் கொண்ட பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்ச்சியாக வன விலங்குகளைக் கண்காணிக்கும் பணியில் ஈடுபடும்.

சென்னை வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள சிங்கங்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டன. இதில் 2 சிங்கங்கள் உயிரிழந்தன. இதையடுத்து வனவிலங்குகளைப் பாதுகாக்க வனத்துறை முதன்மைச் செயலர் தலைமையில், வன ஆர்வலர், ஓய்வு வனப்பணி அதிகாரி (ஐஎஃப்எஸ்), வனப் பாதுகாவலர் உள்ளிட்ட 6 பேர் கொண்ட மாநில அளவிலான பணிக்குழுவை அரசு அமைத்துள்ளது.

இதுகுறித்த தமிழக அரசின் இன்றைய செய்திக்குறிப்பு:

“கோவிட்-19 நோய்த்தொற்றின் காரணமாக காடுகள், புலிகள் சரணாலயங்கள், தேசிய பூங்காக்கள் மற்றும் வனவிலங்கு சரணாலயங்களில் உள்ள விலங்குகளுக்கு மேற்கண்ட நோய்த்தொற்றுகளைத் தடுக்கவும், குறைக்கவும் மற்றும் மேற்கண்ட பணிகளில் ஈடுபடும் அலுவலர்களுக்கு வழிகாட்டுதல்களை வழங்கவும், தமிழக அரசு, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் - வனத்துறை முதன்மைச் செயலாளர் சுப்ரியா சாகு தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவில், முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் (துறைத் தலைவர்), முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் மற்றும் தலைமை வன உயிரினக் காப்பாளர், சிறப்புச் செயலாளர் (வனம்), சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் - வனத்துறை, கூடுதல் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் மற்றும் இயக்குநர், மேம்படுத்தப்பட்ட வன உயிரினப் பாதுகாப்பு நிறுவனம், இந்திய வனப்பணி ஓய்வு அதிகாரி சுந்தரராஜூ, முன்னாள் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் மற்றும் தலைமை வன உயிரினக் காப்பாளர் மற்றும் தியடோர் பாஸ்கரன், வனவிலங்குப் பாதுகாவலர் ஆகியோரை உள்ளடக்கிய ஆறு உறுப்பினர்களைக் கொண்ட மாநில அளவிலான பணிக்குழு (State Level Task Force) ஒன்றினை அமைத்துள்ளது.

இப்பணிக்குழு நோயின் பரவலைக் கண்காணித்தல், தடுப்பூசி வழங்குதல் மற்றும் தொடர்புடைய துறைகளின் பணிகளை உன்னிப்பாகக் கண்காணித்து தொடர் அறிக்கையைச் சமர்ப்பிக்கும்”.

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x