Last Updated : 18 Jun, 2021 04:50 PM

 

Published : 18 Jun 2021 04:50 PM
Last Updated : 18 Jun 2021 04:50 PM

பெரியவர்களை விட குழந்தைகளுக்கு கரோனா பாதிப்புத் தன்மை குறைவு: ஜிப்மர் பச்சிளங் குழந்தைகள் துறைத் தலைவர் தகவல்

பெரியவர்களைக் காட்டிலும் குழந்தைகளுக்கு கரோனா பாதிப்புத் தன்மை குறைவாகவே உள்ளது. தேவையற்ற அச்சம் வேண்டாம் என்று புதுச்சேரி ஜிப்மர் பச்சிளங் குழந்தைகள் நலத்துறைத் தலைவர் ஆதிசிவம் தெரிவித்தார்.

கரோனா தொற்றுள்ள இச்சூழலில் இரண்டாம் அலை இறுதி நிலையில் உள்ளது. மூன்றாம் நிலை தொடர்பான எச்சரிக்கை தடுப்பில் அரசுகள் ஈடுபட்டுள்ளன. குழந்தைகளுக்காக அவசர சிகிச்சைப் பிரிவு போதிய மருந்துடன் புதுச்சேரியில் தயாராக உள்ளதாக துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் குழந்தைகளைப் பாதுகாத்தல் தொடர்பாக டாக்டர் ஆதிசிவம் வெளியிட்ட செய்திக்குறிப்பு :

”பெரியவர்கள் முகக்கவசம் அணிதல், அடிக்கடி கை கழுவுதல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல், கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளுதல் ஆகியவற்றால் வீட்டிலுள்ள குழந்தைகளுக்கு நோய்த்தொற்று ஏற்படாமல் பாதுகாக்க முடியும்.

தாய்ப்பாலூட்டும் அன்னையர் கண்டிப்பாக கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். பிறந்த குழந்தைக்கு முதல் ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். தாய்ப்பால் மூலம் கரோனா கிருமி குழந்தைகளுக்குச் செல்லாது. கரோனா நோய்க்கான எதிர்ப்பு அணுக்கள் தாய்ப்பால் மூலம் குழந்தைக்குக் கிடைக்கும். கரோனா தொற்றுள்ள தாய் பாலூட்டும்போது முகக்கவசம் அணிதல் வேண்டும். கைகளை சோப்பு போட்டுக் கழுவ வேண்டும்.

தேசிய தடுப்பூசி அட்டவணைப்படி குழந்தைகளுக்குக் குறித்த காலத்தில் தடுப்பூசிகளைப் போட வேண்டும். ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு முகக்கவசம் கட்டாயம் இல்லை. குழந்தைகளைத் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வருவதைத் தவிருங்கள். கூட்டமான இடங்களுக்குக் குழந்தைகளை கண்டிப்பாக அழைத்துச் செல்லக் கூடாது.

கரோனா தொற்றுடைய குழந்தைகள் எவ்வித அறிகுறியும் இன்றி இருக்கலாம். சில குழந்தைகளுக்கு காய்ச்சல், சளி, இருமல், வயிற்றுப்போக்கு இருக்கலாம். கரோனா தொற்றுடைய குழந்தைகளுக்கு மூச்சு விடுவதில் சிரமம் இல்லையென்றால் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளலாம். மூச்சுத் திணறல் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம்.

கரோனா தொற்றுள்ள குழந்தைகள் சோர்ந்து போகாமல் இருக்க உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அரிசி கஞ்சி, இளநீர், பழச்சாறு, சத்துள்ள உணவு தரவேண்டும். வயிற்றுப்போக்கு இருந்தால் உப்பு, சர்க்கரை கரைசல் அல்லது ஓஆர்எஸ் தரலாம்.

காய்ச்சலுக்கு பாரசிட்டமால் போதும். குழந்தைகளுக்குத் தேவையற்ற மருந்துகளை மருத்துவ ஆலோசனை இன்றித் தருவது நல்லதல்ல.

கரோனா தவிர்த்து நீண்ட கால நோய்களான ஆஸ்துமா, சர்க்கரை நோய் போன்றவை குழந்தைகளுக்கு இருந்தால் மருத்துவ ஆலோசனைப்படி தேவையான மருந்துகளைத் தொடர்ந்து தரவேண்டும். பெரியவர்களைக் காட்டிலும் குழந்தைகளுக்கு கரோனா பாதிப்புத் தன்மை குறைவாகவே உள்ளது. தேவையற்ற அச்சம் வேண்டாம்.

குழந்தைகளின் மன அழுத்தம் போக்க விளையாடுங்கள்

கரோனா பிரச்சினையால் வீட்டில் அடைந்து கிடப்பதால் குழந்தைகளுக்கு மன உளைச்சல், மன அழுத்தம் போன்ற மனநலப் பிரச்சினைகள் ஏற்படக்கூடும். அதனால் குழந்தைகளுடன் அமர்ந்து பேச வேண்டும். அவர்களுக்கு அச்சம் இருந்தால் அதைப் போக்க வேண்டும். ஏதேனும் மனநலப் பிரச்சினை இருந்தால் மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம்.

குழந்தைகள் மகிழ்ச்சியாக, சுறுசுறுப்பாக இருக்க வீட்டில் குழந்தைகளுடன் விளையாட வேண்டும். குழந்தைகளின் தனிப்பட்ட திறமைகளைக் கண்டறிந்து ஊக்குவியுங்கள். குழந்தைகளுக்குக் கூடுமானவரை தொலைக்காட்சி, செல்போன், கணினி பயன்பாட்டைக் குறையுங்கள். தொலைக்காட்சியில் வரும் பதற்றம் தரும் செய்திகள் குழந்தைகளுக்குத் தெரியவேண்டிய அவசியம் இல்லை".

இவ்வாறு டாக்டர் ஆதிசிவம் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x