

அதிமுக ஆட்சியில் மின்மிகை மாநிலமாகத் திகழ்ந்த தமிழகம், தற்போது திமுக ஆட்சியில் இருளில் மூழ்கத் தொடங்கியுள்ளதாக, முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி குற்றம் சாட்டியுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பேரூராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கு இலவச அரிசி மற்றும் மளிகைப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று (ஜூன் 18) நடைபெற்றது. நிகழ்ச்சியில், வாணியம்பாடி சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில்குமார் தலைமை வகித்தார். சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் கோ.வி.சம்பத்குமார் முன்னிலை வகித்தார்.
முன்னதாக பேரூராட்சி செயலாளர் சரவணன் வரவேற்றார். முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, 100-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்களுக்கு இலவச அரிசி, மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கினார்.
இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி கூறியதாவது:
"கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திமுக ஆட்சியில் இருந்தபோது தமிழகம் இருளில் மூழ்கியிருந்தது. அதன்பிறகு ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு, தமிழகத்தை மின்மிகை மாநிலமாக மாற்றியது. அதிமுக ஆட்சி செய்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் மின்வெட்டு இல்லாமல் இருந்தது. தற்போது திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மீண்டும் பல இடங்களில் மின்வெட்டு ஏற்படுகிறது. தமிழகம் இருளில் மூழ்கத் தொடங்கியுள்ளது. தேர்தலில் வாக்களித்த மக்கள் இதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
காட்பாடி தொகுதியில் துரைமுருகன் வெற்றி பெற்றதை எதிர்த்து, அங்கு மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என, அதிமுக சார்பில் போட்டியிட்ட ராமு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை நீதிமன்றம் உரிய முறையில் விசாரணை நடத்தி நியாயம் கிடைக்க வழிசெய்ய வேண்டும்.
அதிமுக ஆட்சிக் காலத்தில் கரோனா கட்டுப்படுத்தப்படவில்லை என, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். இதை எப்படி ஏற்றுக்கொள்வது? அதிமுக ஆட்சியில் கரோனா பாதிப்பு 10 ஆயிரத்துக்கும் கீழ் இருந்தது. தற்போது 30 ஆயிரத்தைக் கடந்து சென்றுள்ளதே. இது அமைச்சர் சேகர்பாபுவுக்குத் தெரியாதா? கரோனா பாதிப்பு அதிமுக ஆட்சியில் இருந்ததை விட திமுக ஆட்சியில்தான் அதிகமாகப் பரவியுள்ளது.
அதிமுகவில் அமைச்சர்களாக இருந்தவர்களும், முதல்வர், துணை முதல்வர் என அனைவரும் கரோனா தடுப்புப் பணியில் உயிரைப் பணயம் வைத்து வேலை செய்துள்ளோம். அதனால்தான் பாதிப்பும் குறைவாக இருந்தது. உயிரிழப்பும் குறைவாக இருந்தது. தற்போது திமுக ஆட்சி அமைத்த சில வாரங்களிலேயே நோய்ப் பரவல் அதிகமாக இருப்பதை தமிழக மக்கள் மறக்கமாட்டார்கள்.
அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்தி ஆதாயம் தேடுகிறார் சசிகலா. அதிமுகவைச் சேர்ந்தவர்களிடம் அவர் செல்போனில் பேசி ஒற்றுமையைச் சிதைக்கப் பார்க்கிறார். சசிகலா அணி, தினகரன் அணி வெவ்வேறு இல்லை. இரண்டுமே ஒன்றுதான். வேலூரைச் சேர்ந்த எல்.கே.எம்.பி.வாசு ஏற்கெனவே தினகரன் அணியில் இருந்தார். அங்கிருந்து மீண்டும் அதிமுகவில் இணைய விருப்பம் தெரிவித்ததால், அவர் அதிமுகவில் சேர்க்கப்பட்டார். அதுமட்டுமின்றி, அவருக்குப் பதவியும் வழங்கி அழகு பார்த்தது அதிமுக தலைமை.
ஆனால், அதையெல்லாம் மறந்த எல்.கே.எம்.பி.வாசு மீண்டும் தவறான பாதைக்குச் சென்றிருக்கிறார். அதனால் மீண்டும் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் சசிகலாவுடன் பேசினால் கட்சித் தலைமை அவர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கும்".
இவ்வாறு கே.சி.வீரமணி கூறினார்.
இந்நிகழ்ச்சியில், மேற்கு ஒன்றியச் செயலாளர் சாம்ராஜ், நகரச்செயலாளர் சதாசிவம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.