Published : 18 Jun 2021 11:41 AM
Last Updated : 18 Jun 2021 11:41 AM

தலைமறைவாக இருந்த யூடியூபர் மதன் தருமபுரியில் கைது

தலைமறைவாக இருந்த யூடியூபர் மதன், தருமபுரியில் நண்பர் வீட்டில் பதுங்கி இருந்தபோது போலீஸாரால் சுற்றி வளைத்துக் கைது செய்யப்பட்டார். அவரை சென்னைக்கு அழைத்துவந்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.

சேலத்தைச் சேர்ந்த மதன்குமார் என்பவர் சிறுவர்கள் அதிகம் விரும்பி விளையாடும் 'பப்ஜி' போன்ற விளையாட்டுகளின் நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்தி, டாக்சிக் மதன் 18+ என்னும் யூடியூப் சேனலைத் தொடங்கி ஆன்லைன் ஸ்ட்ரீமிங் மூலம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார்.

பப்ஜி விளையாட்டில் திறமையாக விளையாடும் மதன், ஒருகட்டத்தில் ஆன்லைன் ஸ்ட்ரீமிங்கில் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்த ஆரம்பித்ததால், அவரின் யூடியூப் சேனலைப் பின்பற்றுவோர் அதிகமாகி, 7.8 லட்சம் பார்வையாளர்கள் இணைந்தனர். இதனால் மாதம் ரூ.8 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை பணம் சம்பாதித்தார் மதன். இதனால் அவரது அத்துமீறல் அதிகரித்தது.

யூடியூபில் ஆபாசமாகப் பேசுவது, பெண்களை இழிவாகப் பேசுவது, திட்டுவது, சிறுவர் சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறல் செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் மதனுக்கு ஆட்சேபம் தெரிவித்தபோது உங்களால் முடிந்ததைச் செய்துகொள்ளுங்கள் என ஆணவமாகப் பேசி இப்படித்தான் தொடர்வேன் என மிரட்டினார்.

ஒருகட்டத்தில் எல்லை மீறிய மதனின் யூடியூப் சேனல் மீது, சைபர் கிரைம் பிரிவு போலீஸாரிடம் புகார்கள் குவிந்தன. மேலும், மாநிலக் குழந்தைகள் உரிமைகளுக்கான பாதுகாப்பு அமைப்பு மற்றும் முதலமைச்சர் தனிப் பிரிவிலும் புகார்கள் கொடுக்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து சென்னை மாநகரக் காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவினர் விசாரணைக்காக மதனை நேரில் ஆஜராக நோட்டீஸ் அனுப்பினர். புளியந்தோப்பு காவல் நிலையத்தில் ஆஜராக சம்மன் அனுப்பியிருந்தனர். ஆனால், விசாரணைக்கு ஆஜராகாமல் பப்ஜி மதன் தலைமறைவானார்.

இதனையடுத்து அவரை போலீஸார் தேடினர். ஆனால், அவர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி போலீஸாரிடம் சிக்காமல் தப்பித்து வந்தார். அவரது சொந்த ஊரான சேலத்துக்கும் போலீஸார் சென்றனர். பின்னர் அவரது தந்தை, மனைவி கிருத்திகா ஆகியோரை காவல் நிலையம் அழைத்துவந்து போலீஸார் விசாரித்தனர்.

மனைவி கிருத்திகாவின் பெயரில் யூடியூப் இயங்குவதும், அவர் அதன் பங்குதாரர் என்பதாலும் அவரை போலீஸார் கைது செய்து சிறையிலடைத்தனர். மதன் மீது சிறுவர்களைத் தவறாக வழிநடத்தியது, பெண்களை ஆபாசமாகப் பேசியது, தடை செய்யப்பட்ட விளையாட்டை விளையாடியது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் தலைமறைவாக இருந்த மதனை போலீஸார் தேடி வந்தனர். மதனின் நண்பர்கள், உறவினர்களை போலீஸார் தீவிரமாகக் கண்காணித்தபோது மதன் தருமபுரியில் உள்ள நண்பர் வீட்டில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீஸார் மதனைச் சுற்றி வளைத்துக் கைது செய்தனர்.

உடனடியாக அவர் சென்னைக்கு அழைத்து வரப்படுகிறார். அவரிடம் விசாரணை நடத்தியபின் நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைக்க உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x