

அனைத்து தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களிலும் ‘ட்ரோன்’கள் மூலம்வீடியோ பதிவு செய்வதைக் கட்டாயமாக்கி தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
நெடுஞ்சாலைத் திட்டப்பணிகளில் வெளிப்படைத்தன்மை, சமீபத்திய தொழில்நுட்பம் ஆகியவற்றை அதிகரிக்க ‘ட்ரோன்’கள் மூலமான வீடியோ பதிவை கட்டாயமாக்க சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கட்டாயமாக்கியுள்ளது.
இதன்படி ஒப்பந்ததாரர்கள், கடந்த மாதம் மற்றும் தற்போதுநடைபெறும் தேசிய நெடுஞ்சாலைதிட்டப் பணிகளை மேற்பார்வை ஆலோசனைக் குழு தலைவர் முன்னிலையில் ‘ட்ரோன்’ மூலம் வீடியோ எடுத்து, தேசிய நெடுஞ்சாலை ஆணைய இணையதளத்தின் ‘டேட்டா லேக்’-ல் பதிவேற்றம் செய்ய வேண்டும். மேற்பார்வை ஆலோசகர்கள் இதை ஆய்வு செய்து தங்கள் கருத்துகளை, டிஜிட்டல் மாதாந்திர அறிக்கையில் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த வீடியோக்களை நெடுஞ்சாலைத் திட்டத்தின் நேரடி ஆய்வின்போது, தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் பார்த்து குறைகள் இருக்கிறதா? என சரிபார்ப்பார்கள். நீதிமன்றங்கள், தீர்ப்பாயங்களில் இதுதொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண, இந்த வீடியோவை ஆதாரமாகப் பயன்படுத்த முடியும்.
மேலும், தேசிய நெடுஞ்சாலைகளின் தரத்தை மேம்படுத்த, ‘நெட்வொர்க் சர்வே’ வாகனம் மூலம் (என்எஸ்வி), சாலையின் நிலவரம் குறித்து ஆய்வு செய்யப்படும். இந்த வாகனத்தில், நவீன தொழில்நுட்ப வசதிகள் உள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.