

எரிபொருள் விலைக்கேற்ப ஆட்டோ கட்டணத்தை 3 மாதத்துக்கு ஒருமுறை மாற்றி அமைக்க வேண்டும் என்ற நிபந்தனையை தளர்த்துமாறு உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு கோரியுள்ளது.
கோவை நுகர்வோர் அமைப்பின் செயலாளர் என்.லோகு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘கோவையில் ஆட்டோ ஓட்டுநர்கள் அதிக கட்டணம் வசூலிக்கின்றனர். எனவே, சென்னையைப்போல கோவையிலும் ஆட்டோ கட்டணம் நிர்ணயிக்கவும், பெட்ரோல், டீசல் விலைக்கேற்ப ஆட்டோ கட்டணம் நிர்ணயிக்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற முதன்மை அமர்வு பெட்ரோல், டீசல் விலை அடிப்படையில் 3 மாதங்களுக்கு ஒருமுறை ஆட்டோ கட்டணத்தை திருத்தி அமைக்க வேண்டும். கூடுதல் கட்டண வசூல் குறித்த புகார்களை தெரிவிப்பதற்காக இலவச தொலைபேசி எண்களை விளம்பரப்படுத்த வேண்டும். ஆட்டோக்களில் கட்டண விவரங்கள் மற்றும் கூடுதல் கட்டண வசூல் குறித்து புகார் தெரிவிப்பதற்கான எண்களையும் எழுதி வைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 8 வகையான விதிமுறைகளை விதித்து உத்தரவிட்டது.
ஆனால் பெட்ரோல், டீசல் விலைக்கு ஏற்ப 3 மாதங்களுக்கு ஒருமுறை ஆட்டோ கட்டணத்தை அரசு மாற்றி அமைக்கவில்லை. இதையடுத்து உயர் நீதிமன்றத்தில் லோகு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா ஆகியோரைக் கொண்ட முதன்மை அமர்வு முன்பு இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு போக்குவரத்துத் துறை ஆணையர் சத்யபிரத சாகு பதில் மனு தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:
கடந்த 2013-ல் ஆட்டோ கட்டணம் நிர்ணயித்து அரசாணை வெளியிடப்பட்டபோது, ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.77.27 ஆக இருந்தது. முதல் 1.8 கி.மீ.க்கு ரூ.25-ம், அடுத்து ஒவ்வொரு கி.மீட்டருக்கும் ரூ.12 எனவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. அதன்பிறகு பெட்ரோல், டீசல் விலை 37 முறை மாற்றி அமைக்கப்பட்டு, தற்போது பெட்ரோல் ரூ.60.80-க்கு விற்கப்படுகிறது. அதன்படி, தோராயமாக முதல் 1.8 கி.மீட்டருக்கு ரூ.24-ம், அடுத்த ஒவ்வொரு கி.மீட்டருக்கும் ரூ.11.50-ம் நிர்ணயிக்க வேண்டும்.
மாதந்தோறும் மாற்றி அமைக்கப்படும் எரிபொருள் விலையோடு ஒப்பிடும்போது ஆட்டோ கட்டணத்தில் பெரிய மாற்றம் இல்லை. அதாவது, தற்போதைய நிலையில் ஒரு கி.மீட்டருக்கான கட்டணத்தை 39 பைசா குறைக்க வேண்டும். கட்டணத்தை குறைத்தால் ஆட்டோ மீட்டரில் திருத்த வேண்டும். அதற்கு அவகாசம் தேவைப்படும்.
ஆட்டோ விலை, பராமரிப்பு செலவு உள்ளிட்டவற்றை கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. எனவே, உயர் நீதிமன்றம் விதித்த 8 நிபந்தனைகளில், 3 மாதங்களுக்கு ஒருமுறை ஆட்டோ கட்டணத்தை திருத்தி அமைக்க வேண்டும் என்ற நிபந்தனையை மட்டும் தளர்த்த வேண்டும்.
இவ்வாறு பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
தற்போதைய எரிபொருள் விலைக்கேற்ப ஆட்டோ கட்டணத்தை கி.மீட்டருக்கு 39 பைசா குறைத்து, ரூ.11.61 என்று நிர்ணயிக்க வேண்டும் என்று போக்குவரத்துத் துறை ஆணையர் கூறியுள்ளார். இந்த கட்டணத்தை 2016-ம் ஆண்டு முதல் அரசு நிர்ணயிக்கும் என நம்புகிறோம். எவ்வளவு காலத்துக்கு ஒருமுறை ஆட்டோ கட்டணத்தை திருத்தி அமைப்பது என்பது குறித்து பின்னர் பரிசீலிக்கலாம்.
இந்த நீதிமன்றம் விதித்துள்ள மற்ற நிபந்தனைகளை பூர்த்தி செய்வதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களை ஆய்வு செய்வதற்காக வழக்கறிஞர் ஆணையரை நியமிக்க விரும்புகிறோம்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இது தொடர்பாக அரசின் கருத்தை கேட்டு தெரிவிப்பதாக கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த் பாண்டியன் தெரிவித்தார். இதையடுத்து வழக்கு விசாரணையை ஜன.5-ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.