

கரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் தமிழக அரசு தோல்வி கண்டுள்ளது என பாஜக சிறுபான்மைப் பிரிவின் தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
கோவை காந்திபுரத்தில் உள்ள பாஜக மாவட்ட தலைமை அலுவலகத்தில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கடந்த 15 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தில் பாஜக 4 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. பாஜக வெற்றி பெறாது என்று பலரும் கூறிய நிலையில் வெற்றி பெற்றுள்ளோம். வரும் மக்களவைத் தேர்தலில் வெற்றி எண்ணிக்கை அதிகரிக்கும். தமிழக அரசு கரோனாவை தவறான முறையில் கையாண்டுள்ளது. இதில், அரசு தோல்வி கண்டுள்ளது. மது ஒழிப்பே முதல் கையெழுத்து என்று திமுக அரசு கூறியது. இன்று மதுக்கடையை திறந்து விற்பனையை ஊக்குவிப்பது துரோகம். கடந்தகால திமுக ஆட்சியில் பின்னடைவை சந்திக்கும்போது, சர்ச்சை பேச்சை பேசி கவனத்தை திசை திருப்புவார்கள். அதேபோன்று கரோனா விஷயத்தில் அரசு தோற்றுப்போன நிலையில், ஒன்றிய அரசியல் பற்றி பேசுகின்றனர். இதனால் திமுக எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தப்போவதில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.