Published : 18 Jun 2021 03:15 AM
Last Updated : 18 Jun 2021 03:15 AM

மழைநீர் வடிகால் பணிகளை தொடங்குவதில் தாமதம்: 23 ஒப்பந்ததாரர்களுக்கு மாநகராட்சி நோட்டீஸ்

சென்னை மாநகரப் பகுதிகளில் நீர்நிலை புனரமைப்பு மற்றும் மழைநீர் வடிகால் பணிகளை குறித்த காலத்துக்குள் தொடங்காத 23 ஒப்பந்ததாரர்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால் துறை சார்பில் 2,071 கிமீ நீளம் கொண்ட 8,835 மழைநீர் வடிகால் கட்டமைப்புகள், 48.80 கிமீ நீளமுள்ள 30 நீர்வழிக் கால்வாய்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. மாநகராட்சியில் வெளிநாடுகளிலிருந்து வாங்கப்பட்ட அதிநவீன இயந்திரங்களான நீர் மற்றும் நிலத்தில் இயங்கும் ஆம்பிபியன் இயந்திரம், ரோபோடிக் மண் தோண்டும் இயந்திரங்கள் மூலம் நீர்நிலைகளில் ஆகாயத்தாமரை செடிகள் மற்றும் வண்டல்கள் அகற்றப்பட்டு வருகின்றன.

மழைநீர் வடிகால் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் நீர்நிலைகள் புனரமைப்பு மற்றும் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. தொடர்ந்து, மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, முடிவுற்ற மழைநீர் வடிகால் திட்டப் பணிகளை நேற்று ஆய்வு செய்தார்.

விருகம்பாக்கம் கால்வாயில் தூர்வாரும் பணிகள், கோடம்பாக்கம் மண்டலத்தில் காளியம்மன் கோயில் சாலையின் இருபுறங்களிலும் அமைக்கப்பட்ட மழைநீர் வடிகால்கள், கோயம்பேடு வணிக வளாகத்துக்கு சொந்தமான இடத்தில் அமைக்கப்பட்டுள்ள மியாவாக்கி அடர்வனக் காடுகளை பார்வையிட்டார். அப்போது கோயம்பேடு மேம்பால பகுதிகளுக்கு கீழுள்ள காலியிடங்களிலும் மரம், செடிகளை அமைத்து பசுமையாக பராமரிக்க திட்டம் வகுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து கோடம்பாக்கம் மண்டலம், வன்னியர் தெரு, அண்ணா பிரதான சாலை ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகால்களை ஆய்வு செய்தார். மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டு வரும் 30 கால்வாய்களில் நவீன ஆம்பிபியன் மற்றும் ரோபோடிக் இயந்திரங்கள் கொண்டு இதுநாள் வரை 43,200 டன் அளவு வண்டல்கள் மற்றும் ஆகாயத் தாமரை செடிகள் அகற்றப்பட்டுள்ளன.

தொடர்ந்து, நீர்நிலைகள் புனரமைப்பு பணிகளில் குறிப்பிட்ட காலத்துக்குள் பணிகளை தொடங்காமல் ஒப்பந்தப்பணிகளில் தொய்வு ஏற்படுத்திய ஒப்பந்ததாரர்கள் மற்றும் வடசென்னை பகுதிகளுக்குட்பட்ட கொசஸ்தலை வடிநிலப்பகுதிகளின் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் திட்டப்பணிகளில் குறிப்பிட்ட காலத்துக்குள் பணிகளை தொடங்காமல் ஒப்பந்தப் பணிகளில் தொய்வு ஏற்படுத்திய 23 ஒப்பந்ததாரர்களுக்கு பணிக்கான தாமதம் குறித்து காரணம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பணிகளில் தொய்வு இருப்பின் தொடர்புடைய ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆணையர் ககன்தீப் சிங் பேடி உத்தரவிட்டுள்ளார்.

இந்த ஆய்வின்போது துணை ஆணையர்கள் எம்.எஸ்.பிரசாந்த், சிம்ரன்ஜித் சிங் கலான், தலைமைப் பொறியாளர் எல்.நந்தகுமார், மேற்பார்வை பொறியாளர் கே.பி.விஜயகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x