

திருநீர்மலை மலைக்கோயிலில் ரோப் கார் வசதியை ஏற்படுத்துவது தொடர்பாக அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு, ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
தமிழகத்தில் சோளிங்கர் நரசிம்மர் கோயில், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில், திருநீர்மலை ரங்கநாதபெருமாள் கோயில், மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையார் கோயில், திருத்தணி முருகன் கோயில் ஆகிய 5 கோயில்களில் ‘ரோப் கார்' அமைப்பதற்கு முதல்வர் ஸ்டாலின் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோயிலில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ரோப் கார் வசதி ஏற்படுத்த ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.
செங்கல்பட்டு மாவட்டம், திருநீர்மலையில் 108 திவ்யதேசங்களில் ஒன்றான ரங்கநாதபெருமாள் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் சுமார் 190 அடி உயரமுள்ள செங்குத்தான பாறை மீது அமைந்துள்ளது. மொத்தம் 288 படிகளில் ஏறிச் சென்றால் ரங்கநாத பெருமாள், உலகளந்த பெருமாள், சாந்த நரசிம்மர் ஆகிய ஆகிய சுவாமிகளை தரிசிக்க முடியும் . மலையின் கீழே நீர் வண்ணப் பெருமாள் காட்சியளிக்கிறார்.
செங்குத்தான படிகட்டுகள் வழியாக பக்தர்கள் ஏறிச் சென்று சுவாமி தரிசனம் செய்ய சிரமப்படுகின்றனர். இதனால், மலைக்கு ரோப் கார் வசதி ஏற்படுத்த வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது.
இந்நிலையில் நேற்று திருநீர்மலை கோயிலில் அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு, ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.