

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குடியிருப்புப் பகுதிகளில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளால் அபாயம் நிலவுகிறது. அதை அகற்றக் கோரிக்கை விடுத்தால் ரூ.70 ஆயிரம் கட்டணம் கேட்பதாக கிராமப்புற மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
உளுந்தூர்பேட்டை வட்டம் எலவனாசூர்கோட்டை(பிடாகம்), குமாரமங்கலம், அரும்பலவாடி உள்ளிட்டப் பகுதிகளில் குடியிருப்புப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பங்களில் செல்லும் மின் கம்பிகள் மிக தாழ்வாக உள்ளன. இதனால் அப்பகுதியில் வசிப்போர் இரு சக்கர வாகனங்களில் செல்ல முடியாத நிலை உள்ளது.மேலும் குடியிருப்பின் மீது பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவும்அச்சமாக உள்ளது. தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சற்றுஉயரத்தில் அமைத்துத் தரும்படிஅப்பகுதி மக்கள் எலவனாசூர் கோட்டை மின்வாரிய அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். ஆனால் மின்வாரிய அலுவலர்களோ, ஒரு வீட்டிற்கு ரூ.70 ஆயிரம் செலுத்தினால் மின்கம்பிகளை அகற்ற முடியும் என கூறுகின்றனராம்.
அப்பகுதியைச் சேர்ந்தரஹீம் என்பவர் கூறுகையில், "மின்கம்பிகளை அமைக்கும்போதே சற்று உயரத்தில் அமைக்கும்படி வலியுறுத்தினாலும், அதனை பொருட்படுத்தாமல், அவர்களின் விருப்பப்படியே அமைத்து விடுகின்றனர். தற்போது போய் கேட்டால், பணம் செலுத்துங்கள் என்கின்றனர். அரும்பலவாடி கிராமத்தில் ஒரு வீட்டின் பின்புறும் மின்கம்பி மிகவும் தாழ்வாக செல்கிறது. அந்த வீட்டின் உரிமையாளர் சவுக்கு மரங்களைக் கொண்டு, மின்கம்பிகளை தாங்கி பிடிக்கச் செய்திருக்கிறார்.
இதுபோன்ற அபாயகரமான சூழல் நிலவும் நிலையில், மக்களின் உணர்வுகளை மதிக்காமல் மின்வாரியத்தினர் செயல்படுவது வேதனை அளிக்கிறது" என தெரிவித்தார்.
இதற்கிடையே இன்னும் ஓரிரு மாதங்களில் வடகிழக்குப் பருவமழை தொடங்க உள்ளது. இதனால் மின்கசிவு காரணமாக மின் விபத்துக்கள் நடைபெற வாய்ப்புள்ளது.
இதனால் மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக இப்பிரச்சினையில் தலையிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து கள்ளக்குறிச்சி மின்வாரிய உதவி செயற் பொறியாளரை தொடர்பு கொண்ட போது, அவர் பேச முன்வரவில்லை.