

புதுச்சேரியில் தேர்தலில் வென்று 45 நாட்களைக் கடந்தும் அமைச்சரவை அமைவதில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணியில் இழுபறி நீடிக்கிறது. மேலிட ஒப்புதலுடன் பாஜக அமைச்சர்கள் பட்டியல் தந்த பிறகும், என்.ஆர்.காங்கிரஸில் ரங்கசாமிக்கு எம்எல்ஏக்கள் அழுத்தம் தருவதால், துணைநிலை ஆளுநரிடம் அமைச்சரவை பட்டியலை முதல்வர் தருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் பதவியேற்பும் தள்ளி போகிறது.
புதுவையில் சட்டப்பேரவைத் தேர்தலில் வென்று என்ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி அரசின் முதல்வராக கடந்த மாதம் 7-ம் தேதி ரங்கசாமி பதவியேற்றார்.
தேர்தலில் வென்று 45 நாட்களைக் கடந்தும் அமைச்சர்கள் பதவியேற்கவில்லை. ஆரம்பத்தில் அமைச்சர்களை பிரித்துக் கொள்வதில் என்ஆர்.காங்கிரஸ், பாஜக இடையில் மோதல் ஏற்பட்டது. ரங்கசாமி நேரடியாக பாஜக மேலிடத்திடம் பேசியதால் சுமூக முடிவு ஏற்பட்டது.
பாஜகவுக்கு பேரவைத் தலைவர், 2 அமைச்சர்கள், என்ஆர்.காங்கிரஸூக்கு 3 அமைச்சர்கள் என உடன்பாடு ஏற்பட்டது. பாஜக தரப்பில் நமச்சிவாயம் உள்ளிட்ட இருவரை அமைச்சர்களாக நியமிக்க என்ஆர்.காங்கிரஸிடம் பரிந்துரை செய்யப்பட்டது.
இதனால் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட பேரவைத்தலைவர் பதவியேற்போடு, அமைச்சர்களும் பதவியேற்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், என்ஆர்.காங்கிரஸில் அமைச்சர்கள் யார் என முடிவு செய்யாததால் பதவியேற்பு தள்ளிப் போய் கொண்டே இருக்கிறது. தற்போது பாஜகவைச் சேர்ந்த ஏம்பலம் செல்வம் மட்டும் பேரவைத் தலைவராக பதவியேற்றுள்ளார்.
ஆளுநர் இல்லாததால் அமைச்சரவை பட்டியலை தராத சூழல் இருந்த நிலையில் இரண்டு வாரங்களுக்கு பிறகு தெலங்கானாவிலிருந்து துணைநிலை ஆளுநர் தமிழிசை புதுச்சேரி திரும்பினார். புதன்கிழமை மாலை ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து அளித்தார். அப்போதும் முதல்வர் ரங்கசாமி அமைச்சர்கள் பட்டியலை ஆளுநரிடம் தரவில்லை.
பாஜக தரப்பில் இதுபற்றி விசாரித்தபோது, "மேலிட ஒப்புதலோடு கடந்த வாரமே பாஜக அமைச்சர்கள் பட்டியலை முதல்வரிடம் தந்து விட்டோம். அவர்தான் முறைப்படி அறிவிக்க வேண்டும். நாங்கள் விரும்பும் துறைகளை குறிப்பிட்டிருந்தோம். அதற்கு தான் தரும் துறைகளை ஏற்க வேண்டும் என்ற முதல்வரின் நிபந்தனையையும் ஏற்று கொண்டோம். கடந்த திங்கள்கிழமையே அறிவிப்பார் என எதிர்பார்த்தோம்" என்று தெரிவிக்கின்றனர்.
என்.ஆர்.காங்கிரஸ் தரப்பில் விசாரித்தபோது, "என்ஆர்.காங்கிரஸில் உள்ள மூத்த எம்எல்ஏக்களான ராஜவேலு, தேனீ ஜெயக்குமார், லட்சுமிநாராயணன் ஆகியோர் அமைச்சர் பதவி கிடைக்கும் என்று கட்சியிலே பேச்சு உள்ளது. இவர்கள் மூவரும் புதுச்சேரி பிராந்தியத்தை சேர்ந்தவர்கள். காரைக்கால் பிராந்தியத்துக்கு ஒரு அமைச்சர் பதவி வழங்குவது மரபாக இருந்து வருகிறது. காரைக்காலில் என்ஆர்.காங்கிரசில் சந்திர பிரியங்கா, திருமுருகன் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.
இதில் திருமுருகன் 3வது முறையாக வெற்றி பெற்றுள்ளார். புதுவை சட்டப்பேரவையில் வெற்றி பெற்றுள்ள ஒரே பெண் எம்எல்ஏ சந்திர பிரியங்கா. இவர்கள் இருவரும் அமைச்சர் பதவியை பெற தீவிரமாக முயற்சித்து வருகின்றனர். அமைச்சர் பதவியை பெற எம்எல்ஏக்கள் கடும் முயற்சியில் உள்ளனர். அதனால் என்.ஆர்.காங்கிரஸில் அமைச்சர்கள் யார் என்பது முடிவாகாமல் உள்ளது" என்று குறிப்பிடுகின்றனர்.
"முதல்வர் அமைச்சர்கள் பட் டியலை ஆளுநருக்கு அளித்து, அதை மத்திய உள்துறைக்கு அனுப்பி அனுமதி பெற்ற பிறகே பதவியேற்பு நடக்க முடியும். ஏற்கெனவே நல்ல நாளை தேர்வு செய்துதான் எப்பணியையும் ரங்கசாமி செய்வார்.
வளர்பிறைக்காக காத்திருந்து 16-ம் தேதி பதவியேற்பை நடத்த திட்டமிட்டு ஒத்திவைக்கப்பட்டது. தற்போது வரும் 21-ம் தேதி நல்லநாளாக இருப்பதால் அமைச்சர்கள் பதவியேற்பு நடக்கும் என்று தெரிவித்திருந்தனர். தற்போது வரை பட்டியலை தராததால் அந்நாளும் தள்ளி சென்று வரும் 25-ம் தேதி பவுர்ணமியில்தான் அமைச்சரவை பதவியேற்பு நடக்க வாய்ப்புள்ளது. " என்று புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.