Published : 18 Jun 2021 03:16 AM
Last Updated : 18 Jun 2021 03:16 AM

அரும்பாவூர் மரச்சிற்பங்களுக்கு சந்தை வாய்ப்பை ஏற்படுத்தித் தர கோரிக்கை

பெரம்பலூர்

புவிசார் குறியீடு பெற்ற தங்களின் மரச்சிற்பங்களுக்கு சந்தை வாய்ப்பை ஏற்படுத்தித் தர வேண்டும் என அரும்பாவூர் பகுதி மரச்சிற்பக் கலைஞர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் பேரூராட்சிக்குட்பட்ட தழுதாளை கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட மரச்சிற்பக் கலைஞர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் பூவரசு, வாகை, இலுப்பை, மாவலிங்கை, தேக்கு ஆகிய மரங்களைக் கொண்டு, பல்வேறு விதமான சிற்பங்கள், நுட்பமான வேலைப்பாடுகளுடன் கூடிய கோயில் தேர், சுவாமி வீதியுலா செல்லும் வாகனங்கள், கோயில் கொடிமரங்கள் ஆகியவற்றை உருவாக்கி வருகின்றனர்.

தமிழகத்தில் 300-க்கும் அதிகமான கோயில்களின் தேர்கள் இவர்களின் கைவண்ணத்தில் உருவானவை. மேலும், இவர்கள் உற்பத்தி செய்த மரச்சிற்பங்கள் மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் காண்போரைக் கவர்ந்துகொண்டிருக்கின்றன.

இந்நிலையில், 250 ஆண்டுகால பாரம்பரிய வரலாறுகொண்ட இவர்களின் படைப்புக்கு கடந்த 2020 மே 12 அன்று புவிசார் குறியீடு கிடைத்தது. ஆனாலும், கரோனா ஊரடங்கு, பொருளாதார மந்தநிலை போன்ற சிக்கலான சூழல்களால் தங்களின் படைப்புகளை சந்தைப்படுத்த முடியாமல் மரச்சிற்பக் கலைஞர்கள் அவதியுற்று வருகின்றனர்.

இதுகுறித்து அரும்பாவூர் மரச்சிற்பக் கலைஞர்கள் கூட்டமைப்பின் தலைவரும், தமிழ்நாடு அரசின் கலைச்செம்மல் விருது பெற்றவருமான முருகேசன், ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியது:

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கரோனா ஊரடங்கு, பொருளாதார மந்தநிலை போன்ற காரணங்களால் தொழில் மிகவும் நலிவடைந்துள்ளது. எங்களுக்கு போதிய உற்பத்தி ஆர்டர் கிடைக்கவில்லை. இதனால், வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டு, கடன் மேல் கடன் வாங்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

கரோனா முதல் அலையின்போது கடனை திருப்பிச் செலுத்த அரசு கால அவகாசம் வழங்கிய நிலையில், தற்போது அச்சலுகை அளிக்கப்படாததால், கடன் கொடுத்த நிதிநிறுவனங்கள், வங்கிகளின் நிர்பந்தத்தை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறோம். குறைந்தபட்சம் 6 மாதங்கள் கடனை வசூலிப்பதிலிருந்து தளர்வு வழங்க வேண்டும். மேலும், மத்திய அரசுக்கு வழங்கியுள்ள அடையாள அட்டையை வைத்திருக்கும் கைவினைக் கலைஞர்களுக்கு அரசு மானியத்துடன் கூடிய கடன் வழங்க வேண்டும்.

தமிழக அரசின் பூம்புகார் நிறுவனம் ஆண்டுதோறும் சென்னையில் நடத்தும் சர்வதேச அளவிலான கைவினைப் பொருட்கள் விற்பனைக் கண்காட்சி மூலம் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களிடம் இருந்து எங்களுக்கு உற்பத்தி வாய்ப்பு கிடைத்தது. ஆனால், கடந்த 3 ஆண்டுகளாக இந்தக் கண்காட்சி நடைபெறவில்லை. எனவே, அந்தக் கண்காட்சியை ஆண்டுதோறும் நடத்தி, எங்களின் பொருட்களை விற்பனை செய்யவும், போதிய ஆர்டர்கள் கிடைக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x