

சென்னை உயர் நீதிமன்றத்தை விமர்சனம் செய்ததாக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா மீது பதிவு செய்த வழக்கில் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.
தந்தை பெரியார் திராவிடர் கழக வழக்கறிஞர் துரைசாமி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:
புதுக்கோட்டை திருமயத்தில் 2018-ல் செப்டம்பர் மாதம் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா மேடை அமைத்து பேச போலீஸார் அனுமதி மறுத்தனர். இதனால் எச்.ராஜா போலீஸாரை கடுமையாக பேசி, நீதிமன்றத்தையும் கடுமையான விமர்சித்தார்.
இது தொடர்பாக எச்.ராஜா மீது போலீஸார் வழக்குபதிவு செய்தனர். இந்த வழக்கு திருமயம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. போலீஸார் விரைவில் விசாரணையை முடித்து 2 மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இருப்பினும் 3 ஆண்டாக குற்றபபத்திரிகை தாக்கல் செய்யவில்லை. நீதிமன்ற உத்தாரவை பின்பற்றாத காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது ஏப்ரல் 27-க்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். தவறினால் அதிகாரிகள் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில் வழக்கு நீதிபதி இளங்கோவன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அரசு வழக்கறிஞர் ஆர்.எம்.அன்புநிதி வாதிடுகையில், எச்.ராஜாவுக்கு எதிராக திருமயம் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றார்.
இதையடுத்து அந்த குற்றப்பத்திரிகை நகலை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 29-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.