Published : 17 Jun 2021 08:19 PM
Last Updated : 17 Jun 2021 08:19 PM

இலவசங்கள், பரிசுத் திட்டங்கள் மூலமாகத் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஊக்கப்படுத்துவது குறித்துப் பரிசீலிக்க வேண்டும்: புதுவை ஆளுநர் தமிழிசை பேச்சு  

புதுச்சேரி

இலவசங்கள், பரிசுத் திட்டங்கள் மூலமாகத் தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்களை ஊக்கப்படுத்துவது குறித்துப் பரிசீலிக்க வேண்டும் என்று கரோனா வாராந்திரக் கூட்டத்தில் ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தவும், நூறு சதவீதத் தடுப்பூசி செலுத்தப்பட்ட மாநிலமாகப் புதுச்சேரியை மாற்றவும் அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அதனடிப்படையில், வாராந்திர கரோனா மேலாண்மை சீராய்வுக் கூட்டம் துணைநிலை ஆளுநர் மாளிகையில் இன்று (ஜூன் 17) மாலை நடைபெற்றது.

துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமை தாங்கினார். தலைமைச் செயலர் அஷ்வனி குமார், ஏடிஜிபி ஆனந்த மோகன், உள்ளாட்சித்துறைச் செயலர் வல்லவன், சுகாதாரத்துறைச் செயலர் அருண், துணைநிலை ஆளுநரின் செயலர் அபிஜித் விஜய் சவுத்ரி, தனியார் மருத்துவக் கல்லூரிகளின் நிர்வாக அதிகாரிகள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

இயக்குநர் மோகன்குமார் தற்போதைய கரோனா நிலவரம், தடுப்பூசி திருவிழா, கருப்புப் பூஞ்சை நோயின் தாக்கம், மருந்துகளின் கையிருப்பு ஆகியவை குறித்து படக்காட்சி மூலம் விளக்கினர்.

கூட்டத்தில் பேசிய துணைநிலை ஆளுநர் தமிழிசை பேசியதாவது:

‘‘புதுச்சேரியில் கரோனா தொற்றுப் பரவல் வெகுவாகக் குறைந்திருக்கிறது. ஆனாலும், அது முற்றிலுமாகக் குறையும் வரையில் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். நோய்த்தொற்று மற்றும் தடுப்பூசி ஆகிய இரண்டு கூறுகளில் நாம் கவனம் செலுத்த வேண்டும். தடுப்பூசி செலுத்துவதை அதிகரித்தால் ஒழியே நோய்த்தொற்றைக் குறைப்பது அரிது.

இலவசங்கள் மற்றும் பரிசுத் திட்டங்கள் மூலமாகத் தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்களை ஊக்கப்படுத்துவது குறித்துப் பரிசீலிக்க வேண்டும். அதிகமான மக்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டால்தான் கரோனா 3-வது அலையை நாம் எதிர்கொள்ள முடியும். ஆகவே, தடுப்பூசி போடுவதை நாம் விரைவுபடுத்த வேண்டும். அரசு மருத்துவமனைகளின் மருத்துவ உள்கட்டமைப்புகளைப் பொறுத்தவரை நாம் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறோம். தனியார் நிறுவனங்கள் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தக் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். தற்போதைய இக்கட்டான சூழலை ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொண்டு செயல்பட வேண்டும்.

கரோனா தொற்று இல்லாத சூழலை உருவாக்கும் நம்முடைய இலக்கை அடைய நாம் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும். மக்களிடம் அதிகம் விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. முகக்கவசம் அணிந்திருக்கிறார்கள். தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்து நடக்கிறார்கள். இது மகிழ்ச்சியைத் தருகிறது. அவர்களின் ஒத்துழைப்போடு மூன்றாவது அலையை நாம் எளிதாக எதிர்கொள்ள முடியும் என்று நம்புகிறேன். பிரதமர் கூறியிருப்பதன் அடிப்படையில் ஜூன் 21-ம் தேதிக்குப் பிறகு போதிய அளவு தடுப்பூசிகள் நமக்குக் கிடைக்கும்.

சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் அனைவரும் அவசியம் தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கான திட்டத்தை ஏற்படுத்த வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை அரசுத் துறைகள் மேற்கொள்ள வேண்டும். அதில் உள்ள குறைகளை நாம் உடனடியாகக் களைய வேண்டும். விடுபட்ட முன்களப் பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் அவசியம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தடுப்பூசி போட்டுக்கொள்வது அவர்களுக்கு மட்டுமல்லாமல் சமுதாயத்துக்கும் பாதுகாப்பானது.’’

இவ்வாறு ஆளுநர் தமிழிசை பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x