

போக்சோ வழக்கில் இளைஞருக்கு முன்ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்தவர் சாம் இன்பென்ட் ஜோன்ஸ்.இவர் மீது இணையதளத்தில் குழந்தைகளின் ஆபாச படத்தை பதிவிறக்கம் செய்து நண்பர்களுக்கு பகிர்ந்ததாக தல்லாகுளம் அனைத்து மகளிர் போலீஸார் போக்சோ மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டத்தில் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு சாம் இன்பென்ட் ஜோன்ஸ் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பி்த்த உத்தரவு:
மனுதாரர் எம்இ பட்டதாரி. பிஎச்டி படித்து வருகிறார். சம்பவம் ஒரு ஆண்டுக்கு முன்பு நடைபெற்றுள்ளது. செல்போன், சிம்கார்டு ஆகியவற்றை போலீஸாரிடம் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டது. அதன்படி அவர் அவற்றை போலீஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.
இந்த வழக்கில் மனுதாரரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியதில்லை. கரோனா தொற்று காலமாக இருப்பதை மனதில் கொண்டு மனுதாரருக்கு முன்ஜாமீன் வழங்கப்படுகிறது.
அதே நேரத்தில் குழந்தைகள் ஆபாச படங்களை பகிர்வது என்பது தீவிரமாக அணுக வேண்டியது பிரச்சினை. முதல் முறை தவறில் ஈடுபடுவோர்களுக்கும், டிஜிட்டல் உலகில் தொடர்ந்து ஆபாச படங்களை பகிர்ந்து வருவோர்களுக்கும் இடையே வித்தியாசம் உள்ளது.
போக்சோ சட்ட விதிகள் குறித்து வழிப்புணர்வு ஏற்படுத்துவது மத்திய, மாநில அரசுகளின் கடமை. இது மட்டும் போதுமானது அல்ல. நல்லொழுக்க கல்வி மட்டுமே இதுபோன்ற குற்றங்களை தடுக்கும் அரணாக இருக்கும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.