

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் மருத்துவமனைக் கட்டணத்தை முதலமைச்சரின் காப்பீட்டு திட்டத்தின் கீழ் அரசே ஏற்கும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதில், பயன்பெறக் கடந்த திமுக ஆட்சியில் வழங்கப்பட்ட கலைஞர் காப்பீட்டு திட்ட அட்டை செல்லுமா எனப் பலருக்கும் சந்தேகம் உள்ளது.
இதுகுறித்துக் கோவை மாவட்டக் காப்பீட்டு திட்ட ஒருங்கிணைப்பாளர் கூறியதாவது:
’’தங்களின் பழைய காப்பீட்டு அட்டை செயல்பாட்டில் உள்ளதா என்பதைத் தெரிந்துகொள்ள www.cmchistn.com/ என்ற இணையதளத்தில், Enrollment என்பதன் கீழ் உள்ள Member search / e card என்பதை கிளிக் செய்து, URN No. என்பதில் கலைஞர் காப்பீட்டு திட்ட அட்டை எண்ணையும், பழைய ரேஷன் அட்டை எண்ணையும் பதிவிட்டால் உங்களின் விவரம் வரும். அதில், பாலிசி எண்ணை கிளிக் செய்தால் குடும்ப உறுப்பினர்கள் விவரம், காப்பீட்டு திட்ட தொகை ஆகிய தகவல்கள் இருக்கும்.
அந்தப் பக்கத்தின் மேற்பகுதியில் Generate e-card என்று இருக்கும். அதை கிளிக் செய்தால் பார்கோடுடன் கூடிய, முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்ட அடையாள அட்டையின் மின் அட்டை (இ-கார்டு) கிடைக்கும். அதைப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். இணையதளத்தைப் பயன்படுத்தத் தெரியாதவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள காப்பீட்டு திட்ட அலுவலகத்துக்கு நேரடியாக வந்து காப்பீட்டு திட்ட அட்டை செயல்பாட்டில் உள்ளதா என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.
வரும்போது பழைய ரேஷன் அட்டை, கலைஞர் காப்பீட்டு திட்ட அட்டையை எடுத்துவர வேண்டும். ஒருவேளை அந்த அட்டை செயல்பாட்டில் இல்லையெனில், புதிதாக விண்ணப்பிக்கப் படிவம் அளிக்கப்படும். தனியார் மருத்துவமனைக்குச் செல்லும் முதல் நாளிலேயே காப்பீட்டு திட்டத்தைப் பயன்படுத்தி சிகிச்சை பெறுகிறோம் என்பதைச் சொல்லிவிட்டு மருத்துவமனையில் சேர்ந்தால், எவ்விதக் கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. அரசே முழு சிகிச்சைக் கட்டணத்தையும் ஏற்கும்.
இவ்வாறு சிகிச்சைக்குச் செல்வோர் பழைய, புதிய குடும்ப அட்டைகள், முதலமைச்சரின் காப்பீட்டு திட்ட அட்டை, நோயாளியின் ஆதார் அட்டை, ஆர்டி-பிசிஆர் பரிசோதனை முடிவுச் சான்று ஆகியவற்றை எடுத்துச்செல்ல வேண்டும்’’.
இவ்வாறு காப்பீட்டு திட்ட ஒருங்கிணைப்பாளர் தெரிவித்தார்.