Published : 17 Jun 2021 05:51 PM
Last Updated : 17 Jun 2021 05:51 PM

சசிகலாவுடன் பேசுகிறவர்களை கட்சியை விட்டு நீக்க வேண்டும்: ஆர்.பி.உதயகுமார் தலைமையிலான மதுரை அதிமுக கூட்டத்தில் தீர்மானம்

மதுரை

‘‘சசிகலாவுடன் தொலைபேசியில் பேசுகிறவர்களை கட்சியை விட்டு நீக்க வேண்டும்’’ என்று மதுரையில் முன்னாள் அமைச்சர் ஆர்பி.உதயகுமார் தலைமையில் நடந்த அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினர்.

மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் டி.கல்லுப்பட்டியிலுள்ள அம்மா கோயிலில் இன்று நடைபெற்றது. மாவட்ட அவைத் தலைவர் ஐயப்பன் தலைமை வகித்தார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கே.மாணிக்கம், பா.நீதிபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்தக் கூட்டத்தில் ஜெ., பேரவை செயலாளரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளருமான முன்னாள் அமைச்சர் ஆர்பி.உதயகுமார் பேசினார். ஜெ., துணைச் செயலாளர் வெற்றிவேல், ஒன்றிய கழகச் செயலாளர்கள் அன்பழகன், ராமசாமி, மகாலிங்கம், ரவிச்சந்திரன், செல்லம்பட்டி ராஜா, பிச்சை ராஜன், பொதுக்குழு உறுப்பினர்கள் நாகராஜ் சுமதி சாமிநாதன் மற்றும் பேரூர் செயலாளர்கள், அனைத்து அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

சூழ்ச்சிகள் , தந்திரங்கள் , சதிச் செயல்கள் அனைத்தையும் முறியடித்து , மக்களின் பேரன்பைப் பெற்று 75 இடங்களில் அதிமுக வெற்றி பெற்றிருக்கிறது.

இந்த உழைப்பைச் சுரண்டும் ஒட்டுண்ணிகளாகவும், நற்பெயரை அழிக்கும் நச்சுக்களைகளாகவும் தங்களை வளப்படுத்திக் கொண்ட சிலர் அதிமுகவை அபகரித்துவிடலாம் என்று வஞ்சக வலையை நாளும் விரித்துக் கொண்டிருக்கின்றனர். அதற்கு கண்டனம் தெரிவிப்பது,

சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக , அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கப்போவதாக அறிவித்த சசிகலா இப்போது கழகம் இவ்வளவு வலுவும், பொலிவும், தொண்டர் பெரும்படையும், மக்கள் செல்வாக்கும் பெற்றிருப்பதைப் பார்த்ததும் அரசியலில் முக்கியத்துவத்தைத் தேடிக்கொள்ள முயல்கிறார்.

ஒவ்வொரு நாளும் தொலைபேசியில் சிலருடன் பேசுவதும், அதை ஊர் அரிய தொலைக்காட்சியில் ஒளிபரப்புவதுமாக வினோதமான ஒரு நாடகத்தை அரங்கேற்றி வருகிறார்.

அவருடன் தொலைபேசியில் பேசும் நிர்வாகிகளை கட்சியை விட்டு நீக்க வேண்டும்.

அதிமுக சட்ட திட்டங்களுக்கு மாறாகவும் , இயக்கத்தின் லட்சியங்களுக்கு விரோதமாகவும் செயல்படுபவர்கள் யாராக இருப்பினும் அவர்கள் மீது தயவு தாட்சண்யமின்றி கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றினர்.

இதேபோல், திருச்சி, சேலம், விழுப்புரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் அதிமுகவினர் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

கட்சி மேலிட உத்தரவு அடிப்படையில் இவர்கள் தீர்மானம் நிறைவேற்றுகிறார்களா? அல்லது நாங்கள் சசிகலா பக்கம் இல்லை என்பதைத் தெரிவிக்க இவர்கள் இந்த கூட்டம் போட்டு தீர்மானம் நிறைவேற்றுகிறார்களா? என்பது தெரியவில்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x